அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Tuesday, November 20, 2012

சுன்னத்தான முஹர்ரம் நோன்பின் சிறப்புகள்



بسم الله الرحمن الرحيم



இன்ஷா அல்லாஹ் முஹர்ரம் நோன்பு வரும் வெள்ளி மற்றும் சனி கிழமைகளில் எதிர்கொள்ளவிருக்கிறோம். அதற்கு முன் அதனுடைய சிறப்புகளை பார்ப்போம்.


அல்லாஹ் உலகத்தை படைத்து மனிதர்களுக்கு காலங்களை கணித்துக் கொள்வதற்காக பன்னிரண்டு மாதங்களாக ஆக்கினான். இந்த மாதங்களில் சில மாதங்களை சிலதை விட்டும், சில நாட்களை சிலதை விட்டும், மேலும் சில நேரங்களை சிலதை விட்டும் வணக்க வழிபாடுகள் மூலம் சிறப்பாக்கினான். இதன் மூலம் மனிதன் அதிகம் நற்செயல்கள் செய்யவேண்டும் என்பதும் அவனது அந்தஸ்து நற்செயல்களால் உயர்த்தப்பட வேண்டும் என்பதும் ஒரே நோக்காகும். இத்தகைய சிறப்பான மாதங்களில் முஹர்ரம் மாதமும் ஒன்றாகும்.
புனிதமான மாதங்களில் ஒரு மாதம்:
அல்லாஹ் அல்குர்-ஆனில் குறிப்பிட்டு கூறும் புனிதமான நான்கு மாதங்களில்  ஒரு மாதம் முஹர்ரம் மாதமாகும் அல்லாஹ் கூறுகின்றான்.
“அல்லாஹ்விடம் நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை, வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு புனிதமானவையாகும். இதுதான் நேரான மார்க்கம். இவைகளில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே அநியாயம் செய்து கொள்ளாதீர்கள். இணைவைப்போர் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போன்று நீங்களும் அவர்கள் அனைவருடனும் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்த்தியாளர்களுடன் இருக்கின்றான் என்பதனை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்” (அல்குர் 09:36)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“வானங்களையும் பூமியையும் படைத்தது முதல் காலம் சுழன்று கொண்டிருக்கின்றது. ஒரு வருடத்தில் பன்னிரண்டு மாதங்கள் உள்ளன. அவற்றில் நான்கு புனிதமானவையாகும். அதிலும் மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக வருகின்ற துல் கஃதா,  துல் ஹிஜ்ஜா, முஹர்ரம் மாதங்களாகும்.  அடுத்தது ஜமாதுல் ஊலாவுக்கும் ஷஃபானுக்கும் மத்தியில் இருக்கின்ற ரஜப் மாதமும் ஆகும்” (ஆதாரம்: புகாரி)
மேற்குறிப்பிடப்பட்ட ஆதாரங்கள், புனிதமான மாதங்கள் நான்கு என்பதனை தெளிவு படுத்துகின்றது. அவை:
1) துல் கஃதா,
2) துல் ஹிஜ்ஜா,
3) முஹர்ரம்,
4) ரஜப்
எனப்படும் மாதங்களாகும். இம்மாதங்களுக்கு இருக்கக்கூடிய புனிதத்துவத்தை நாம் பாதுகாக்க வேண்டும். இம்மாதங்களில் பேணவேண்டிய சில ஒழுங்கு முறைகளை இஸ்லாம் நமக்கு தெளிவுபடுத்தி தருகின்றது. ஹுரும் என்ற அரபுச்சொல் தடுக்கப்பட்டவை, புனிதம் என்ற பொருள்களை உள்ளடக்கி இருக்கின்றன.
உதாரணமாக, ‘ஹராம்’ என்பதற்கு ‘தடுக்கப்பட்டவை’ என்ற பொருளாகும். ‘தக்பீரதுல் இஹ்ராம்’ என்பது தொழுகையில் முதல் தக்பீரை குறிக்கின்றது. முதல் தக்பீர் கட்டியதிலிருந்து ஸலாம் கொடுக்கும் வரை ஹலாலாக்கப்பட்ட விடயங்கள் தடுக்கப்பட்டிருப்பதால் அதனை இவ்வாறு கூறப்படும். இதே போன்றுதான் ஹஜ், உம்ராவின் போது அணியும் ‘இஹ்ராமும்’ ஆகும். ‘இஹ்ராம்’ என்பதும் ‘தடுக்கப்பட்வை’ எனும் கருத்தில் வந்துள்ளது. இஹ்ராம் அணிந்ததிலிருந்து அதை அகற்றும் வரை சில விடயங்கள் தடுக்கப்பட்டுள்ளதே அதற்குக் காரணமாகும். இவை அனைத்தும் ‘ஹுரும்’ என்ற அடிப்படை சொல்லிலிருந்து வந்தவையாகும். எனவே ‘ஹுரும்’ என்பது ‘தடுக்கப்பட்டவை’ அல்லது ‘புனிதமானவை’ என்று விளங்க முடியும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
“அல்லாஹ் புனிதப்படுத்தியவைகளை, யார் கண்ணியப்படுத்துகின்றாரோ அதுவே அவரது இரட்சகனிடத்தில் அவருக்கு  மிகச் சிறந்ததாகும்” (அல்குர்-ஆன் 22:30)
மனிதன் தடுக்கப்பட்ட விடயங்களிலிருந்து முற்றுமுழுதாக தவிர்ந்து கொள்ள வேண்டும். குறிப்பாக புனிதமான மாதங்களாகிய இம்மாதங்களில் பேணுதலாகாவே இருக்க வேண்டும். எவ்வாறு ஹரத்தின் எல்லைகளின் புனிதத்துவத்தை மீறி பாவம் செய்தால் பன்மடங்கு பாவம் கிடைக்குமோ அதே போன்று புனிதமான இம்மாதங்களில் பாவம் செய்வதென்பது பன்மடங்கு  பாவங்களை ஈட்டித்தரும். அதே போன்று இம்மாதங்களில் நன்மை செய்வது பல மடங்கு நன்மைகளையும் ஈட்டித்தரும்.
இம்மாதங்களில் போர் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இறை நிராகரிப்பாளர்கள் போரை முதலில் ஆரம்பித்தால் அதனை தடுப்பதற்காக வேண்டி முஸ்லிம்களும் போர் புரியலாம். இந்த புனிதத்தன்மை, பொதுவாக முஹர்ரம் மாதம் உட்பட ஏனைய மூன்று மாதங்களுக்கும் பொதுவானவையாகும். இவ்வாறு ஒவ்வொரு புனித மாதத்திற்கும் தனிச்சிறப்புக்கள் உள்ளன. அவற்றில் முஹர்ரம் மாததின் சிறப்புக்களை கீழ் குறிப்பிடும் தகவல்களூடாக அறிந்துகொள்ளலாம்.
அரபு வருட கணிப்பீட்டின் முதல் மாதம்!
முஸ்லிம்களின் வருடக் கணிப்பீட்டில் முதல் மாதம் முஹர்ரம் மாதமாகும். உமர் (ரழி) அவர்கள் தனது  ஆட்சிக் காலத்தில் நபித்தோழர்களை ஒன்று சேர்த்து எப்பொழுது முதல் இஸ்லாமிய வருடம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று ஆலோசனை கேட்டார்கள். இதனடிப்படையில் பலரும் பல மாதங்களை குறிப்பிட்டார்கள். இறுதியில் முஸ்லிம்களின் முதல் மாதமாக முஹர்ரம் மாதத்தையும் வருடம் ஆரம்பிப்பது நபிகளார் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற நாள் என்றும் முடிவெடுத்தார்கள்.
நபி மூஸா (அலை) அவர்களை பிர்ஃஅவ்னிடமிருந்து காப்பாற்றிய மாதம்!
அல்லாஹ் நபி மூஸா (அலை) அவர்களை கொடுங்கோல் ஆட்சியாளனாகிய ஃபிர்அவ்னிடமிருந்து காப்பாறியது முஹர்ரம் மாதத்தில்தான். இமாதத்தில் ஏராளமான நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன.
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது யூதர்கள் ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்பதை கண்டார்கள். நபியவர்கள் அவர்களிடத்தில் நீங்கள் நோற்கின்ற இந்த நோன்பு எந்த நாள் என்று வினவினார். அதற்கு அவர்கள், “இது ஒரு புனிதமான நாளாகும்; இதில் அல்லாஹ் மூஸா (அலை) அவர்களையும் அவர்களது சமுதாயத்தினரையும் ஃபிர்அவ்னிடமிருந்து காப்பாற்றினான்; மேலும் ஃபிர்அவ்னையும் அவனது கூட்டத்தினரையும் கடலிலே மூழ்கடித்தான். இதனால் மூஸா (அலை), அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் முகமாக அந்நாளில் நோன்பு நோற்றார்கள். ஆகையால் நாங்களும் நோன்பு நோற்கின்றோம்” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூஸாவை பின்பற்றுவதற்கு உங்களை விட நாமே தகுதியானவர்கள் என்று கூறி, நபி (ஸல்) அவர்களும் நோன்பு நோற்று பிறரையும் நோன்பு நோற்க ஏவினார்கள்” (ஆதாரம்: :புகாரி, முஸ்லிம்),
முஹர்ரம் மாதத்தில் நோற்கும் நோன்பின் சிறப்பு!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ரமழான் மாத நோன்புக்கு பின் சிறந்த நோன்பு முஹர்ரம் மாத நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பின் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும்” (ஆதாரம்: முஸ்லிம்)
இந்த ஹதீஸில் முஹர்ரம் மாதத்தில் நோற்கின்ற சுன்னத்தான உபரியான நோன்புகளுக்கு பல நன்மைகள் உள்ளன என்பதனை “ரமழானுக்கு பின்னர் சிறந்த நோன்பு முஹர்ரம் மாதத்தில் நோற்கும் நோன்பு” என்ற வரிகளின் மூலம் விளங்கக் கிடைக்கின்றது, இதனால் வாராந்திர நோற்கக்கூடிய திங்கள், வியாழன் நோன்புகள், அதே போன்று மாதாந்திரம் நோற்கக்கூடிய 13,14,15 அய்யாமுல் பீழ் (வெள்ளை தினங்கள்), அதேபோன்று அய்யாமுஸ்ஸூத் (கருப்புத்தினங்கள்) 27.28,29 நோற்கக்கூடிய நோன்புகளை நோற்று நபி (ஸல்) அவர்கள் ரமழானுக்குப் பின்னர் சிறந்த நோன்பு என்று சொல்லப்பட்ட சிறப்பைபெற முயலவேண்டும்.
முஹர்ரம் மாதத்தில் நோற்கும் ஆஷூரா நோன்பின் சிறப்பு!
முஹர்ரம் மாதத்தில் நபிகளார் செய்துவந்த, ஏவியவற்றில் ஆஷூரா நோன்பு  முக்கியமானதாகும். ஆஷூரா என்பது பிறை கணிப்பீட்டின்படி முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாளாகும், நபிகளார் (ஸல் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செல்வதற்கு முன்னர் மக்காவில் முஹர்ரம் மாத பத்தாவது நாள் ஆஷூரா நோன்பு நோற்று வந்தார்கள்.
குரைஷிகள் (மக்காவில்) ஆஷூரா நோன்பை நோற்று வந்தார்கள், அதனை நபிகளாரும் நோற்று வந்தார்கள்.. மதீனாவுக்கு ஹிஜ்ரத் வந்தபோது அதனை நோற்குமாறு கட்டளையிட்டார்கள். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் அதனை விரும்பியவர்கள் நோற்கலாம் விரும்பியவர்கள் விடலாம் என்றார்கள். (ஆதாரம்: புகாரி)
இந்த ஹதீஸ் ரமழானுக்கு முன்னர் கடமையாக்கப்பட்ட நோன்பு முஹர்ரம் மாத ஆஷூரா நோன்பு என்பதனையும், ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் ஆஷூரா நோன்பை விரும்பியவர்கள் நோற்கலாம் என்பதனையும் தொளிவுபடுத்துகின்றது.
பல உபரியான வணக்கங்களுக்கு இஸ்லாம் சில சிறப்புக்களை வைத்திருப்பதை போன்று ஆஷூரா நோன்புக்கு இருக்கக்கூடிய சிறப்பையும் நபிகளார் கூறியிருக்கின்றார்கள். இன்னாளில் நோன்பு நோற்பது முந்தைய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையுமென்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ஆஷூரா நோன்பு அதற்கு முந்தைய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என்று நான் கருதுகின்றேன்”.  (ஆதாரம்: முஸ்லிம்)
முந்தைய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என்பதன் பொருள் சிறு பாவங்களையே இங்கு குறிக்கின்றது. மாறாக பெரும் பாவம் செய்தவர்களுக்கு அவர்களது குற்றங்களுக்கு பரிகாரமாக அமைவது தெளபாவாகும்.
முஸ்லிம்கள் அனைத்து விடயங்களிலும் யூதர்களுக்கு மாற்றமாக தங்களது நடவடிக்கைகளை ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பதனையே இஸ்லாம் வலியுறுத்துகின்றது. யூதர்களும் ஆஷூரா நோன்பை நோற்று வந்ததனால் அவர்களுக்கு மாற்றமாக ஒன்பதாவது நாளும் நோற்கவேண்டும் என்று நபிகளார் கூறியிருக்கின்றார்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“வருகின்ற வருடம் நான் இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன்” (ஆதாரம்: முஸ்லிம்)
ஆஷூரா நோன்பை நபிகளார் நோற்று வந்தார்கள்; அத்தோடு யூதர்களுக்கு மாற்றம் செய்வதற்காக வேண்டி மதீனாவுக்கு வந்ததன் பின்னர் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்க வேண்டும் என்று கூறினார்கள். இதனடிப்படையில் பத்தாவது நாளோடு ஒன்பதாவது  நாளும் சேர்த்து நோன்பு நோற்பதே சிறந்ததாகும். இதற்கே அதிகமான ஆதாரங்களும் உள்ளன. முடியாவிட்டால் பத்தாவது, பதினொறாவது நாட்களுமாக நோன்பு நோற்பது யூதர்களுக்கு மாற்றமாக செய்கின்ற செயலாக மாறும். இவ்விரு முறைகளிலும் ஒருவருக்கு நோன்பு நோற்க முடியாவிட்டால் பத்தாவது நாள் மாத்திரமாவது நோன்பு நோற்றுக் கொள்ள வேண்டும்.
வல்ல அல்லாஹ் புனிதப்படுத்திய இம்மாதத்தின் புனிதத் தன்மையை பேணி, இம்மாதத்தில் அதிகமதிக நன்மைகளை செய்து, சுன்னத்தான நோன்பாகிய ஆஷூரா நோன்பையும் நோற்று நபிகளார் கூறிய நற்கூலியை அடைய  நம் அனைவருக்கும் அருள் புரிவானாகவும்.

Thursday, November 1, 2012

இஸ்லாமிய இல்லம்


         
மகத்துவமும் பெருமதிப்புமிக்க அளவில்லா கருணையாளன் வல்ல நாயன் அல்லாஹ் தன் திருமறையில்:

நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும் இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.  (அல்குர்ஆன்: 9: 71)

இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவரும் தங்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், சந்தோசமாகவும் இருக்க வேண்டும் என்று  தான் விரும்புவார்கள். அந்த சந்தோசமான வாழ்க்கை அமைய வேண்டுமானால் அவர்கள் வசிக்கும் இல்லம் சந்தோசம் பொங்கும் இல்லமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் நாள் முழுவதும் வெளியில் சென்று உழைத்து விட்டு களைப்புடன் வருபவர்களுக்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும். அதை தான் எல்லோரும் எதிர்பார்ப்பார்கள்... 

 ஆனால் இதற்கு மாற்றமாக ஒரு இல்லம் இருந்து விடுமானால் மிகப் பெரும் மனக்குழப்பத்திற்கு ஆளாகி பலவிதமான நோய்களுக்கு ஆளாகி கஷ்டப்பட வேண்டிய நிலை எற்பட்டு விடும். 

 ஒரு இல்லத்தின் சந்தோசத்தில் முக்கிய பங்காற்றுபவர்கள் கணவனும் மனைவியும் தான்.அதனால் தான் முக்காலத்தையும் அறிந்த இறைவன், அந்த இருவருக்குள்ளும் அன்பையும் பாசத்தையும் ஏற்படுத்தி யுள்ளான். 

இன்றைய காலகட்டத்தில் நாகரீகத்தின் உச்சாணிக் கொம்பில் இருக்கிறோம் என்று பீற்றிக் கொண்டு உலா வரும் மேலைநாடுகளில் குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் குடும்ப அமைப்புக்கள், அவர்களின் தவறான நடைமுறை வாழ்க்கையில் தாறுமாறாகிப்போன நிலையில் அந்த குடும்ப அமைப்பினர் மனநிம்மதியை தேடி அலைவதைப் பார்க்கிறோம். கணவன்  மனைவிக்குள் உறவு சரியில்லை. பெற்றோர் பிள்ளைகள் இடையே பரஸ்பரம் பாசம் அன்பு என்பதெல்லாம் இருக்கின்ற இடம் தெரியாமல் போய், தனி மனித உரிமை, சுதந்திரம் என்ற பெயரில் பெற்றோர் பிள்ளைகளின் இடையே சண்டைகளும் சச்சரவுகளும் ஏற்பட்டு குடும்பத்தின் நிம்மதி கெடுகின்றது. 

தாங்கள் பெற்று, கஷ்டப்பட்டு வளர்த்த பிள்ளைகள் வளர்ந்த பின் அவர்கள் செய்யும் தவறான நடவடிக்கைகளை கண்டிக்கும் பட்சத்தில் பெற்றோர்கள் மீது காவல்துறையில் புகார் செய்வதும், நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து தங்களை பெற்று வளர்த்த பெற்றோர்களையே சிறைச்சாலைக்கு அனுப்பும் அவலம் மேலைநாடுகளில் சர்வசாதாரணம்.

நீதிமன்றங்கள்கூட பெற்றோர்களின் மாண்புகளை உணராமல் தனி மனித சுதந்திரம் என்ற பெயரில் தண்டனை வழங்குவதையும் ஊடகங்களில் இருந்து அறிந்து வருகிறோம்.

இந்த தவறான வாழ்க்கை முறையை வெறுத்த சிலர் உண்மையை தேடி மனநிம்மதியை தேடி இஸ்லாத்தை நோக்கி வருவதையும் காண்கிறோம்.

ஒரு இல்லம் என்றால், அந்த இல்லம் மன அமைதி அளிக்கக் கூடியதாக அல்லாஹ்வின் அருள் பெற்றதாக

இருக்க வேண்டும். அதுவல்லாமல் சிறைச்சாலைப் போன்றோ அல்லது உதவி முகாம்கள் போன்றோ ஒரு இல்லம் இருக்கக்கூடாது.

மறுமையின் அதிபதியாம் அல்லாஹூ தஆலா தன் திருமறையில் இதைப்பற்றி :

உங்கள் வீடுகளில் உங்களுக்கு அல்லாஹ் நிம்மதியை ஏற்படுத்தினான். கால்நடைகளின் தோல்களிலிருந்து உங்களுக்குக் கூடாரங்களை ஏற்படுத்தினான். உங்கள் பிரயாணத்தின் போதும், ஊரில் நீங்கள் தங்கியிருக்கும் போதும் அவற்றை எளிதாக எடுத்துச் செல்கிறீர்கள். செம்மறி ஆட்டு உரோமங்கள், வெள்ளாட்டின் உரோமங்கள் ஒட்டகத்தின் உரோமங்கள் ஆகியவற்றிலிருந்து ஆடைகளையும் குறிப்பிட்ட காலம் வரை (பயன்படும்)வசதிகளையும் எற்படுத்தினான். (16:80)

இஸ்லாமிய இல்லம் என்பது, கணவன் மற்றும் மனைவி இருவரும் பொறுப்புமிக்கவர்களாகவும், ஒருத்தருக் கொருத்தர் நம்பிக்கை உடையவர்களாகவும் இருக்க வேண்டும்.ஏனென்றால் அவ்விருவரும் தான் அந்த இல்லத்தின் தூண்களாவார்கள். அவர்கள் ஒருவரை யொருவர் புரிந்து கொண்டு உண்மையான நேசத்துடன் உள்ளும் புறமும் திகழ வேண்டும்.

எதிர்கால சந்ததியினர், கண்ணியமானவர்களாகவும், மதிப்புமிக்கவர்களாகவும் திகழ்வதற்கு ஊன்றுகோலாக அமைதல் வேண்டும். இதைப்போன்ற இல்லங்கள்தான் நல்ல பண்புள்ள, நாகரீகமுள்ள சமுதாயத்தை உருவாக்க முக்கிய பங்காற்றும்.

இஸ்லாமிய இல்லம் என்பது தூயமார்க்கத்தை நிலை நாட்டும் எஃகு கோட்டையாக திகழ வேண்டும். எந்தளவுக்கு என்றால் உங்கள் எதிரிகள் உங்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தாத வகையில் அமைதல் வேண்டும்.

நம் உயிரினும் மேலான அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களே! உங்களின் பொறுப்புக்கள் பற்றி மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே! அவர் தன் குடிமக்கள் பற்றி விசாரிக்கப்படுவார். ஆண் தன் குடும்பத்திற்கு பொறுப்பாளியாவான். அவன் தன் பொறுப்புக்களைப் பற்றி விசாரிக்கப்படுவான். பெண் தன் கணவன் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். தன் பொறுப்புக்குட்பட்டவைக் குறித்து விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் எஜமானனின் உடமைகளுக்கு பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான் (அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) புகாரி 2409)

இஸ்லாமிய இல்லத்திற்கு அழகிய உதாரணமாக திகழ்ந்தது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் இல்லம் என்றால் அது மிகையாகாது. அந்த இல்லத்தில் ஆடம்பரம் இருந்ததில்லை. பொருட்கள் வீண்விரயமாக்கப் பட்டதில்லை.அல்லாஹ்வை நினைவு கூறும் ஒரு இல்லமாக விளங்கியது.

அதேபோல் இஸ்லாமிய இல்லத்தின் கதாநாயகர்களாக இருக்கக்கூடிய பெற்றோர்கள், கண்ணியமானவர்களாக, மார்க்கத்தில் உண்மையாளர்களாக இருக்க வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் அந்த இல்லமும் அதில் வளர்ந்து வரும் குழந்தைகளும் நஷ்டவாளிகளாக வழிகேட்டில் விழுந்து விடுவார்கள்.

மகத்துவமிக்க கண்ணியவான் அல்லாஹ் தன்திருமறையில்:

(முஹம்மதே) தொழுமாறு உமது குடும்பத்தினரை ஏவுவீராக! அதில் (ஏற்படும் சிரமங்களை) சகித்துக் கொள்வீராக! உம்மிடம் நாம் செல்வத்தைக் கேட்க வில்லை. நாமே உமக்குச் செல்வத்தை அளிக்கிறோம். (இறை) அச்சத்திற்கே (நல்ல) முடிவு உண்டு. (அல்குர்ஆன் 20:132) 

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

ஒவ்வொரு குழந்தையும் இயற்கை மார்க்கத்தில் (இஸ்லாம்) தான் பிறக்கின்றன. அவர்கள் யூதனாகவோ, கிருஸ்தவனாகவோ அல்லது மஜூஸியாகவோ ஆவது அவர்களின் பெற்றோர்களின் வளர்ப்பினாhல் தான் (அபூஹூரைரா(ரலி) புகாரி, முஸ்லிம்)

மேலும் அந்த கதாநாயகர்களான பெற்றோர்கள், அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவு கூறக் கூடியவர்களாகவும் தங்;களின் சந்ததிகளின் நல்வாழ்விற்கு இறைவனிடம் கையேந்துபவர்களாகவும் இருப்பார்கள் என்று மார்க்கம் கூறுகிறது.

எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும் மக்களிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாக எங்களை ஆக்குவாயாக! என்று கூறுகின்றனர். (அல்குர்ஆன் 25:74)

மேலும்,   என் இறைவா! என்னையும், என் சந்ததிகளையும் தொழுகையை நிலைநாட்டுவோராக ஆக்குவாயாக! எங்கள் இறைவா! எனது பிரார்த்தனையை ஏற்பாயாக!

எங்கள் இறைவா! என்னையும் எனது பெற்றோரையும் நம்பிக்கைக் கொண்டோரையும் விசாரணை நடைபெறும் நாளில் மன்னிப்பாயாக! (அல்குர்ஆன்: 14: 40-41) 

தற்கொலை செய்து கொண்டு தன்னுடைய உயிரை மாய்த்துக் கொள்வது, போதைப்பொருட்கள் உபயோகப் படுத்துவது போன்ற தவறான செயல்களுக்கெல்லாம் முக்கிய காரணம், அத்தகைய இல்லங்களில் இஸ்லாமிய மார்க்கப் போதனைகள் போதிக்கப்படாமல் இருந்ததே காரணமாகும். இஸ்லாமிய மார்க்கச் சட்டங்களுக்குட்பட்ட இல்லமாக திகழ்ந்தால் இப்பேர்ப்பட்ட செயல்கள் நடைபெறாது என்பது திண்ணம்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் வீடுகளை மண்ணறைகளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். எந்தவொரு வீட்டில், சூரத்துல் பகரா ஓதப்படுகிறதோ அந்த வீட்டில் ஷைத்தான் நுழைய மாட்டான். (அபூஹூரைரா(ரலி) முஸ்லிம், அஹ்மது, திர்மிதி, நஸயி)

அதாவது ஒரு இஸ்லாமிய இல்லத்தில் இருக்க வேண்டிய முக்கியமான அம்சம், அல்லாஹ்வும் அவனது தூதரும் எதைச் சொன்னார்களோ அதை எந்தவிதமான விருப்பு வெறுப்புமின்றி நடைமுறைப்படுத்தக்கூடிய இல்லமாக இருக்க வேண்டும். அதனடிப்படையில் அமைந்தால் தான் அது இஸ்லாமிய இல்லமாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் தன் திருமறையில்:

உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள். முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள். தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள். அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள். இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப்படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான்.

உங்கள் வீடுகளில் கூறப்படும் அல்லாஹ்வின் வசனங்களையும், ஞானத்தையும் நினையுங்கள்.அல்லாஹ் நுணுக்கமானவனாகவும், நன்கறிந்தவனாகவும் இருக்கிறான். (அல்குர்அன் 33:33-34) 

மேலும்,   அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும்போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும் பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார்.

அல்லாஹ்வை நினைவு கூறும் இல்லத்தில் மகிழ்ச்சியும் சந்தோசமும் பொங்கும் என்று இஸ்லாம் சொல்லிக் காட்டுகிறது. 

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் திருநாமங்கள் ஓதப்பட்டு நினைவு கூறப்பட்டு கொண்டிருக்கும் வீட்டிற்கும் அல்லாஹ்வை மறந்த வீட்டிற்கும் உள்ள உதாரணம், உயிருள்ள மனிதனுக்கும், இறந்த மனிதனுக்கும் உள்ள வித்தியாசம் போலாகும். (அபுமூசா(ரலி) புகாரி, முஸ்லிம்) 

மேலும்,   உங்கள் வீடுகளில் தொழுது கொள்ளுங்கள். கடமையில்லாத சுன்னத்தான தொழுகைகளை உங்கள் வீடுகளில் தொழுது கொள்வது சிறந்தது. (ஜைத் பின் தாபித்(ரலி) முஸ்லிம்)

அதேபோல் தான் மட்டும் அல்லாஹ்வைத் தொழுது கொண்டு, தனது மனைவி மக்களைப் பற்றி கவலைக் கொள்ளாமல் இருக்க இஸ்லாத்தில் அனுமதியில்லை. தன்னுடைய குடும்பத்தார்களையும் அதன்படி செயல்பட தூண்டக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.

அல்லாஹ் தன் திருமறையில்: 

நம்பிக்கைக் கொண்டோரே! உங்களையும்,உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டும் காத்துக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும் கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப் பட்டதைச் செய்வாhர்கள். (அல்குர்ஆன் 66:6)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தன்னுடைய மனைவிமார்களை எழுப்பி விடக்கூடியவர்களாக இருந்துள்ளார்கள். 

ஆயிஷாவே! எழுந்திரு! வித்ரை தொழுது கொள்! (ஆயிஷா(ரலி) புகாரி முஸ்லிம்)

தன் மனைவியை இரவுத் தொழுகைக்கு எழுப்பிய மனிதருக்கு அல்லாஹ் அருள்புரிவானாக! தன் கணவனை இரவுத் தொழுகைக்கு எழுப்பும் பெண்ணிற்கு அல்லாஹ் அருள் புரிவானாக! (அபூஹூரைரா(ரலி) அபுதாவுத், நஸயி, இப்னுமாஜா)

ஆகவே சகோதர சகோதரிகளே! உங்களின் இல்லங்கள் இஸ்லாமிய மணம் கமழும் இல்லமாக அமைய அல்லாஹ் அருள்புரிவானாக!
      
நன்றி : M.NASEER ALI