அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Monday, November 11, 2013

நீடூர் - நெய்வாசல்: சுன்னத்தான முஹர்ரம் நோன்பின் சிறப்புகள்

நீடூர் - நெய்வாசல்: சுன்னத்தான முஹர்ரம் நோன்பின் சிறப்புகள்: முஹர்ரம்  நோன்பு  நாட்கள் UAE- 13/11/13 & 14/11/13 INDIA - 14/11/13 & 15/11/13 சுன்னத்தான முஹர்ரம் நோன்பின் சிறப்புகள்: ...

சுன்னத்தான முஹர்ரம் நோன்பின் சிறப்புகள்

முஹர்ரம் நோன்பு நாட்கள்

UAE- 13/11/13 & 14/11/13
INDIA - 14/11/13 & 15/11/13

சுன்னத்தான முஹர்ரம் நோன்பின் சிறப்புகள்:

இன்ஷா அல்லாஹ் முஹர்ரம் நோன்பு வரும் வெள்ளி மற்றும் சனி கிழமைகளில் எதிர்கொள்ளவிருக்கிறோம். அதற்கு முன் அதனுடைய சிறப்புகளை பார்ப்போம்.


அல்லாஹ் உலகத்தை படைத்து மனிதர்களுக்கு காலங்களை கணித்துக் கொள்வதற்காக பன்னிரண்டு மாதங்களாக ஆக்கினான். இந்த மாதங்களில் சில மாதங்களை சிலதை விட்டும், சில நாட்களை சிலதை விட்டும், மேலும் சில நேரங்களை சிலதை விட்டும் வணக்க வழிபாடுகள் மூலம் சிறப்பாக்கினான். இதன் மூலம் மனிதன் அதிகம் நற்செயல்கள் செய்யவேண்டும் என்பதும் அவனது அந்தஸ்து நற்செயல்களால் உயர்த்தப்பட வேண்டும் என்பதும் ஒரே நோக்காகும். இத்தகைய சிறப்பான மாதங்களில் முஹர்ரம் மாதமும் ஒன்றாகும்.
புனிதமான மாதங்களில் ஒரு மாதம்:
அல்லாஹ் அல்குர்-ஆனில் குறிப்பிட்டு கூறும் புனிதமான நான்கு மாதங்களில்  ஒரு மாதம் முஹர்ரம் மாதமாகும் அல்லாஹ் கூறுகின்றான்.
“அல்லாஹ்விடம் நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை, வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு புனிதமானவையாகும். இதுதான் நேரான மார்க்கம். இவைகளில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே அநியாயம் செய்து கொள்ளாதீர்கள். இணைவைப்போர் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போன்று நீங்களும் அவர்கள் அனைவருடனும் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்த்தியாளர்களுடன் இருக்கின்றான் என்பதனை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்” (அல்குர் 09:36)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“வானங்களையும் பூமியையும் படைத்தது முதல் காலம் சுழன்று கொண்டிருக்கின்றது. ஒரு வருடத்தில் பன்னிரண்டு மாதங்கள் உள்ளன. அவற்றில் நான்கு புனிதமானவையாகும். அதிலும் மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக வருகின்ற துல் கஃதா,  துல் ஹிஜ்ஜா, முஹர்ரம் மாதங்களாகும்.  அடுத்தது ஜமாதுல் ஊலாவுக்கும் ஷஃபானுக்கும் மத்தியில் இருக்கின்ற ரஜப் மாதமும் ஆகும்” (ஆதாரம்: புகாரி)
மேற்குறிப்பிடப்பட்ட ஆதாரங்கள், புனிதமான மாதங்கள் நான்கு என்பதனை தெளிவு படுத்துகின்றது. அவை:
1) துல் கஃதா,
2) துல் ஹிஜ்ஜா,
3) முஹர்ரம்,
4) ரஜப்
எனப்படும் மாதங்களாகும். இம்மாதங்களுக்கு இருக்கக்கூடிய புனிதத்துவத்தை நாம் பாதுகாக்க வேண்டும். இம்மாதங்களில் பேணவேண்டிய சில ஒழுங்கு முறைகளை இஸ்லாம் நமக்கு தெளிவுபடுத்தி தருகின்றது. ஹுரும் என்ற அரபுச்சொல் தடுக்கப்பட்டவை, புனிதம் என்ற பொருள்களை உள்ளடக்கி இருக்கின்றன.
உதாரணமாக, ‘ஹராம்’ என்பதற்கு ‘தடுக்கப்பட்டவை’ என்ற பொருளாகும். ‘தக்பீரதுல் இஹ்ராம்’ என்பது தொழுகையில் முதல் தக்பீரை குறிக்கின்றது. முதல் தக்பீர் கட்டியதிலிருந்து ஸலாம் கொடுக்கும் வரை ஹலாலாக்கப்பட்ட விடயங்கள் தடுக்கப்பட்டிருப்பதால் அதனை இவ்வாறு கூறப்படும். இதே போன்றுதான் ஹஜ், உம்ராவின் போது அணியும் ‘இஹ்ராமும்’ ஆகும். ‘இஹ்ராம்’ என்பதும் ‘தடுக்கப்பட்வை’ எனும் கருத்தில் வந்துள்ளது. இஹ்ராம் அணிந்ததிலிருந்து அதை அகற்றும் வரை சில விடயங்கள் தடுக்கப்பட்டுள்ளதே அதற்குக் காரணமாகும். இவை அனைத்தும் ‘ஹுரும்’ என்ற அடிப்படை சொல்லிலிருந்து வந்தவையாகும். எனவே ‘ஹுரும்’ என்பது ‘தடுக்கப்பட்டவை’ அல்லது ‘புனிதமானவை’ என்று விளங்க முடியும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
“அல்லாஹ் புனிதப்படுத்தியவைகளை, யார் கண்ணியப்படுத்துகின்றாரோ அதுவே அவரது இரட்சகனிடத்தில் அவருக்கு  மிகச் சிறந்ததாகும்” (அல்குர்-ஆன் 22:30)
மனிதன் தடுக்கப்பட்ட விடயங்களிலிருந்து முற்றுமுழுதாக தவிர்ந்து கொள்ள வேண்டும். குறிப்பாக புனிதமான மாதங்களாகிய இம்மாதங்களில் பேணுதலாகாவே இருக்க வேண்டும். எவ்வாறு ஹரத்தின் எல்லைகளின் புனிதத்துவத்தை மீறி பாவம் செய்தால் பன்மடங்கு பாவம் கிடைக்குமோ அதே போன்று புனிதமான இம்மாதங்களில் பாவம் செய்வதென்பது பன்மடங்கு  பாவங்களை ஈட்டித்தரும். அதே போன்று இம்மாதங்களில் நன்மை செய்வது பல மடங்கு நன்மைகளையும் ஈட்டித்தரும்.
இம்மாதங்களில் போர் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இறை நிராகரிப்பாளர்கள் போரை முதலில் ஆரம்பித்தால் அதனை தடுப்பதற்காக வேண்டி முஸ்லிம்களும் போர் புரியலாம். இந்த புனிதத்தன்மை, பொதுவாக முஹர்ரம் மாதம் உட்பட ஏனைய மூன்று மாதங்களுக்கும் பொதுவானவையாகும். இவ்வாறு ஒவ்வொரு புனித மாதத்திற்கும் தனிச்சிறப்புக்கள் உள்ளன. அவற்றில் முஹர்ரம் மாததின் சிறப்புக்களை கீழ் குறிப்பிடும் தகவல்களூடாக அறிந்துகொள்ளலாம்.
அரபு வருட கணிப்பீட்டின் முதல் மாதம்!
முஸ்லிம்களின் வருடக் கணிப்பீட்டில் முதல் மாதம் முஹர்ரம் மாதமாகும். உமர் (ரழி) அவர்கள் தனது  ஆட்சிக் காலத்தில் நபித்தோழர்களை ஒன்று சேர்த்து எப்பொழுது முதல் இஸ்லாமிய வருடம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று ஆலோசனை கேட்டார்கள். இதனடிப்படையில் பலரும் பல மாதங்களை குறிப்பிட்டார்கள். இறுதியில் முஸ்லிம்களின் முதல் மாதமாக முஹர்ரம் மாதத்தையும் வருடம் ஆரம்பிப்பது நபிகளார் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற நாள் என்றும் முடிவெடுத்தார்கள்.
நபி மூஸா (அலை) அவர்களை பிர்ஃஅவ்னிடமிருந்து காப்பாற்றிய மாதம்!
அல்லாஹ் நபி மூஸா (அலை) அவர்களை கொடுங்கோல் ஆட்சியாளனாகிய ஃபிர்அவ்னிடமிருந்து காப்பாறியது முஹர்ரம் மாதத்தில்தான். இமாதத்தில் ஏராளமான நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன.
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது யூதர்கள் ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்பதை கண்டார்கள். நபியவர்கள் அவர்களிடத்தில் நீங்கள் நோற்கின்ற இந்த நோன்பு எந்த நாள் என்று வினவினார். அதற்கு அவர்கள், “இது ஒரு புனிதமான நாளாகும்; இதில் அல்லாஹ் மூஸா (அலை) அவர்களையும் அவர்களது சமுதாயத்தினரையும் ஃபிர்அவ்னிடமிருந்து காப்பாற்றினான்; மேலும் ஃபிர்அவ்னையும் அவனது கூட்டத்தினரையும் கடலிலே மூழ்கடித்தான். இதனால் மூஸா (அலை), அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் முகமாக அந்நாளில் நோன்பு நோற்றார்கள். ஆகையால் நாங்களும் நோன்பு நோற்கின்றோம்” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூஸாவை பின்பற்றுவதற்கு உங்களை விட நாமே தகுதியானவர்கள் என்று கூறி, நபி (ஸல்) அவர்களும் நோன்பு நோற்று பிறரையும் நோன்பு நோற்க ஏவினார்கள்” (ஆதாரம்: :புகாரி, முஸ்லிம்),
முஹர்ரம் மாதத்தில் நோற்கும் நோன்பின் சிறப்பு!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ரமழான் மாத நோன்புக்கு பின் சிறந்த நோன்பு முஹர்ரம் மாத நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பின் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும்” (ஆதாரம்: முஸ்லிம்)
இந்த ஹதீஸில் முஹர்ரம் மாதத்தில் நோற்கின்ற சுன்னத்தான உபரியான நோன்புகளுக்கு பல நன்மைகள் உள்ளன என்பதனை “ரமழானுக்கு பின்னர் சிறந்த நோன்பு முஹர்ரம் மாதத்தில் நோற்கும் நோன்பு” என்ற வரிகளின் மூலம் விளங்கக் கிடைக்கின்றது, இதனால் வாராந்திர நோற்கக்கூடிய திங்கள், வியாழன் நோன்புகள், அதே போன்று மாதாந்திரம் நோற்கக்கூடிய 13,14,15 அய்யாமுல் பீழ் (வெள்ளை தினங்கள்), அதேபோன்று அய்யாமுஸ்ஸூத் (கருப்புத்தினங்கள்) 27.28,29 நோற்கக்கூடிய நோன்புகளை நோற்று நபி (ஸல்) அவர்கள் ரமழானுக்குப் பின்னர் சிறந்த நோன்பு என்று சொல்லப்பட்ட சிறப்பைபெற முயலவேண்டும்.
முஹர்ரம் மாதத்தில் நோற்கும் ஆஷூரா நோன்பின் சிறப்பு!
முஹர்ரம் மாதத்தில் நபிகளார் செய்துவந்த, ஏவியவற்றில் ஆஷூரா நோன்பு  முக்கியமானதாகும். ஆஷூரா என்பது பிறை கணிப்பீட்டின்படி முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாளாகும், நபிகளார் (ஸல் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செல்வதற்கு முன்னர் மக்காவில் முஹர்ரம் மாத பத்தாவது நாள் ஆஷூரா நோன்பு நோற்று வந்தார்கள்.
குரைஷிகள் (மக்காவில்) ஆஷூரா நோன்பை நோற்று வந்தார்கள், அதனை நபிகளாரும் நோற்று வந்தார்கள்.. மதீனாவுக்கு ஹிஜ்ரத் வந்தபோது அதனை நோற்குமாறு கட்டளையிட்டார்கள். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் அதனை விரும்பியவர்கள் நோற்கலாம் விரும்பியவர்கள் விடலாம் என்றார்கள். (ஆதாரம்: புகாரி)
இந்த ஹதீஸ் ரமழானுக்கு முன்னர் கடமையாக்கப்பட்ட நோன்பு முஹர்ரம் மாத ஆஷூரா நோன்பு என்பதனையும், ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் ஆஷூரா நோன்பை விரும்பியவர்கள் நோற்கலாம் என்பதனையும் தொளிவுபடுத்துகின்றது.
பல உபரியான வணக்கங்களுக்கு இஸ்லாம் சில சிறப்புக்களை வைத்திருப்பதை போன்று ஆஷூரா நோன்புக்கு இருக்கக்கூடிய சிறப்பையும் நபிகளார் கூறியிருக்கின்றார்கள். இன்னாளில் நோன்பு நோற்பது முந்தைய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையுமென்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“ஆஷூரா நோன்பு அதற்கு முந்தைய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என்று நான் கருதுகின்றேன்”.  (ஆதாரம்: முஸ்லிம்)
முந்தைய வருடத்தின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என்பதன் பொருள் சிறு பாவங்களையே இங்கு குறிக்கின்றது. மாறாக பெரும் பாவம் செய்தவர்களுக்கு அவர்களது குற்றங்களுக்கு பரிகாரமாக அமைவது தெளபாவாகும்.
முஸ்லிம்கள் அனைத்து விடயங்களிலும் யூதர்களுக்கு மாற்றமாக தங்களது நடவடிக்கைகளை ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பதனையே இஸ்லாம் வலியுறுத்துகின்றது. யூதர்களும் ஆஷூரா நோன்பை நோற்று வந்ததனால் அவர்களுக்கு மாற்றமாக ஒன்பதாவது நாளும் நோற்கவேண்டும் என்று நபிகளார் கூறியிருக்கின்றார்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“வருகின்ற வருடம் நான் இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன்” (ஆதாரம்: முஸ்லிம்)
ஆஷூரா நோன்பை நபிகளார் நோற்று வந்தார்கள்; அத்தோடு யூதர்களுக்கு மாற்றம் செய்வதற்காக வேண்டி மதீனாவுக்கு வந்ததன் பின்னர் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்க வேண்டும் என்று கூறினார்கள். இதனடிப்படையில் பத்தாவது நாளோடு ஒன்பதாவது  நாளும் சேர்த்து நோன்பு நோற்பதே சிறந்ததாகும். இதற்கே அதிகமான ஆதாரங்களும் உள்ளன. முடியாவிட்டால் பத்தாவது, பதினொறாவது நாட்களுமாக நோன்பு நோற்பது யூதர்களுக்கு மாற்றமாக செய்கின்ற செயலாக மாறும். இவ்விரு முறைகளிலும் ஒருவருக்கு நோன்பு நோற்க முடியாவிட்டால் பத்தாவது நாள் மாத்திரமாவது நோன்பு நோற்றுக் கொள்ள வேண்டும்.
வல்ல அல்லாஹ் புனிதப்படுத்திய இம்மாதத்தின் புனிதத் தன்மையை பேணி, இம்மாதத்தில் அதிகமதிக நன்மைகளை செய்து, சுன்னத்தான நோன்பாகிய ஆஷூரா நோன்பையும் நோற்று நபிகளார் கூறிய நற்கூலியை அடைய  நம் அனைவருக்கும் அருள் புரிவானாகவும்.

Sunday, October 13, 2013

முன் பின் வருட பாவத்தை அழிக்கும் அரஃபா நோன்பு

ரமலான் மாதக் கடமையான ஒரு மாத நோன்பைத் தவிர மற்ற சில நாட்களிலும் நோன்பு வைக்க நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்கள். அவற்றில் மிக முக்கியமான நோன்பு அரஃபாதின நோன்பாகும். ரமலானைத் தொடர்ந்து வரும் இஸ்லாமிய வருடத்தின் இறுதி மாதமான துல்ஹஜ் மாதம் ஒன்பதாம் நாள் அரஃபா தினமாகும்.
அதாவது ஹஜ் யாத்திரிகர்கள் ஹஜ்ஜின் முக்கியக் கடமைச் செயற்பாடுகளுள் ஒன்றான அரஃபா மைதானத்தில் ஒன்று கூடும் நாளாகும். இந்நாளில் ஹஜ்ஜுக்குச் செல்லாத மற்ற உலக முஸ்லிம்கள் நோன்பு நோற்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.
அரஃபா நாளில் நோன்பு நோற்பது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் "அது கடந்த வருடத்தின் மற்றும் வரக்கூடிய வருடத்தின் பாவத்தை போக்கிவிடும்!" என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி), நூல்: முஸ்லிம், திர்மிதி, அபூதாவூத்.
"நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் ஒன்பதாம் நாள் நோன்பு வைப்பார்கள் என்று நபிகளார் (ஸல்) அவர்களின் துணைவியார்களில் சிலர் கூறினார்கள்" அறிவிப்பவர்: ஹுனைதாபின் காலித்(ரலி), நூல்கள்: அபூதாவூத், நஸயி, அஹ்மத்.
அரஃபா தினத்தன்று அரஃபா மைதானத்தில் (குழுமியிருக்கும் ஹாஜிகள்நோன்பு நோற்பதை நபி (ஸல்) அவர்கள் தடைவிதித்துள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: அபூதாவூத், அஹ்மத், நஸயி.
அரஃபா மைதானம் என்பது மறுமையில் இறைவன் முன் மனிதர்கள் விசாரணைக்காக எழுப்பப்பட்டு நிறுத்தி வைக்கப்படும் மஹ்ஷர் மைதானத்திற்கு இவ்வுலகில் இறைவன் காண்பிக்கும் ஓர் உதாரணமாகும். இதனை அரஃபா மைதானத்தில் ஒரு முறையாவது ஹஜ்ஜிற்காகச் சென்று ஒன்று கூடியவர்கள் கண்ணாரக் கண்டு உணர்ந்திருப்பார்கள். இலட்சக்கணக்கான மக்கள் ஓர் இடத்தில் ஒரே நேரத்தில் ஒன்று கூடுவதும் தன்னைப் படைத்தவனிடம் இருகரமேந்தி பாவமன்னிப்புத் தேடுவதும் பல மணிநேரம் இவ்வுலகச் சிந்தையின்றி இறை தியானத்தில் இருப்பதும் இத்தினத்தில் அரஃபா மைதானத்தில் நிகழ்கிறது.
அதே தினம் உலகின் பிற பகுதிகளில் இருக்கும் முஸ்லிம்களும் இறை தியானத்தில் தங்களையும் ஈடுபடுத்த, நோன்பு வைப்பதற்கு நபி (ஸல்) அவர்கள் ஏவியிருப்பது பல்வேறு அர்த்தங்களையும் எதிர்பார்ப்புகளையும் வெளிப்படுத்தி நிற்கிறது. எனவே இத்தினத்தில் ஹஜ்ஜிற்குச் செல்லாத மற்ற முஸ்லிம்கள் அவசியம் நோன்பு வைத்து, தங்களையும் ஹஜ்ஜாஜிகளோடு இறைதியானத்தில் ஒன்றிணைக்க முயல வேண்டும்.
அரஃபா நாளில் நோன்பு நோற்பதை நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டதற்குக் கூடுதலாக முஸ்லிம்களில் சிலர் துல்ஹஜ்ஜின் ஆரம்ப பத்து நாட்கள் நோன்பு நோற்கிறார்கள். அரஃபா தினம் அடங்கிய துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து தினங்களின் சிறப்பை நபி(ஸல்) அவர்கள் நவின்றுள்ளதுதான் இதற்குக் காரணமாகும்.
"அல்லாஹ்விடத்தில் துல்ஹஜ் பத்து நாட்களில் நற்காரியங்களை செய்வதற்கு மிகவும் விருப்பமான இந்த நாட்களைவிட வேறெந்த நாட்களும் இல்லை" என்று நபி (ஸல்) அவர்கள் கூற, அதற்கு நபித்தோழர்கள், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விற்காக போரிடுவதைவிடவா?" என்று வினவ, "ஆம். அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதைவிட; ஆனால், தன் உயிரையும் பொருளையும் பணயம் வைத்துப் புறப்பட்டு, இரண்டையும் (இறைவழியில்) இழந்துவிட்டவன் செய்த ஜிஹாதைத் தவிர" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பத்து நாட்களின் சிறப்பைக் கருதி முஸ்லிம்களில் சிலர் இப்பத்து நாட்களிலும் நோன்பு நோற்கின்றனர். ஆனால் ஆயிஷா (ரலி) அவர்கள் இந்நாட்களில் நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றதைக் கண்டதில்லை என்று மறுத்துரைக்கின்றார்கள்.
"நான் நபி (ஸல்) அவர்களை (இந்தப்)பத்து நாட்களில் நோன்பு நோற்றதாகப் பார்த்ததே இல்லை"அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி), நூல்கள்: முஸ்லிம், திர்மிதி.
மற்றவரைவிட எல்லாவிதத்திலும் முன்னிலையில் இறை தியானங்களில் ஈடுபடுவதை அதிகம் விரும்பி, தன்னை எல்லாவிதமான இறைதியானங்களிலும் ஈடுபடுத்தி முன்னுதாரணமாக விளங்கிய நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் பத்து நாட்கள் நோன்பு நோற்று இருந்தால் அதைப்பற்றியும் அறிவிப்புகள் வந்திருக்க வேண்டும். ஹதீஸ்களில் எந்த ஒரு நபித்தோழரும் அவ்வாறு அறிவித்தாக நாமறிந்தவரை செய்திகளைக் காண முடியவில்லை. எனவே இந்த அரஃபா நோன்புக்கு முந்திய தினங்களில் வேறு வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதே சாலச் சிறந்ததாகும். மற்ற நாட்களைவிட இந்த நாட்களில் அல்லாஹ்வைத் துதிப்பதில் அதிகக் கவனம் செலுத்த முயல வேண்டும்.
நோன்பு நோற்பது இறைவனிடம் மிகப்பெரிய பாக்கியத்தைப் பெற்றுத்தரும் செயலாக இருந்தாலும் ரமலான்மாதக் கடமையான நோன்பைத் தவிர துல்ஹஜ் மாதத்தில் தொடர்ச்சியாக நோன்பு வைக்க முஸ்லிம்களின் வழிகாட்டியான நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தரவில்லை.
நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தராத, செய்து காண்பிக்காத எந்தச் செயலையும் மார்க்கத்தில் நல்லமலாக அங்கீகரிக்க இயலாது. ஆனால் அதேநேரம் குர்ஆன் ஓதுதல், திக்ருகள், தேவையுடையவருக்கு உதவுதல், இரவுத் தொழுகை, அல்லாஹ்வைப் புகழ்தல், இஸ்திக்ஃபார் (பாவமன்னிப்பு தேடுதல்), ஸதகாத் (தர்மங்கள் செய்வது) போன்ற ஏனைய இறை அருளை பெற்றுத்தரும் காரியங்களில் ஈடுபடலாம்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.
அல்லாஹ் முஸ்லிம்கள் அனைவரின் நல் அமல்களையும் பிரார்த்தனைகளையும் ஏற்று நல்லருள் புரிவானாக... ஆமீன்.
நன்றி: சத்தியமார்க்கம்.காம் 

Sunday, September 29, 2013

குர்பானியின் சட்டங்கள்


இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமையாக - ஈமான் கொள்வது, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் எனும் இபாதத்துகளுள், எல்லாத் திசைகளிலுமிருந்து உலக முஸ்லிம்கள் காபத்துல்லாஹ்வை நோக்கிப் புனிதப் பயணத்தை மேற்கொண்டு ''ஹஜ்'' எனும் கடமையை நிறைவேற்றும் துல்ஹஜ் மாதத்தை அடைந்து விட்டோம்.

''மக்களுக்கு ஹஜ்ஜைப் பற்றி அறிவிப்பீராக!'' (அல்குர்ஆன் 22:28) என இறைவன் தனது அடியார் நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கிட்டக் கட்டளையின் பேரில், அறிவித்த ஹஜ்ஜின் அழைப்பை ஏற்று காலங் காலமாக இறையில்லத்தை நோக்கி மக்கள் பயணம் சென்று ஹஜ் எனும் இறைவணக்கத்தை நிறைவேற்றுகின்றனர்.
'என் இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தருவாயாக" (என்று பிரார்த்தித்தார்). எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயம் கூறினோம்.

பின் 
(அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார், "என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன?" (மகன்) கூறினார், 'என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ், நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் ஒருவனாகக் காண்பீர்கள். 

ஆகவே, அவ்விருவரும் 
(இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக் கிடத்தியபோது, நாம் அவரை, 'யா இப்ராஹீம்!" என்றழைத்தோம். 'திடமாக நீர் (கண்ட)கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுக்கிறோம் என்று கூறினோம். நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ்சோதனையாகும். பெரிய பலிப் பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம். இன்னும் அவருக்காகப் பிற்காலத்தவருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம்."
 (அல்குர்ஆன், 37:100-108)

துல்ஹஜ் மாதம் ஹாஜிகளுக்கு மட்டும் இபாதத் மாதமன்று! நபி இப்ராஹீம் (அலை) மற்றும் அவர்களின் மைந்தர் இஸ்மாயீல் (அலை) அவர்களின் நினைவாக உலக முஸ்லிம்கள் அனைவரும் ''குர்பானி'' எனும் பிராணிகளை அறுத்துப் பலியிடும் இபாதத்தை நிறைவேற்றும் ஈதுல் அழ்ஹா எனும் தியாகத் திருநாளைக் கொண்டாடும் மாதமுமாகும். எனவே, துல்ஹஜ் மாதத்தில் அறுத்துப் பலியிடுதல் பற்றிய இஸ்லாத்தின் சட்டங்களை நினைவுபடுத்திக் கொள்வோம். 

குர்பானி கொடுக்க நாடுபவர்
"நீங்கள் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ் பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும்வரை முடியையும் நகத்தையும் வெட்ட வேண்டாம்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா , பைஹகீ.)

"குர்பானி கொடுக்கும் பிராணிகள் ஆரோக்கியமாகவும், ஊனமற்றதாகவும் இருக்க வேண்டும். தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் கண்பார்வைக் குறைவு, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் சதைப்பற்று இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுக்கக் கூடாது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மதீ ,அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா) 

பிராணிகளின் கண்களையும், காதுகளையும், கவனித்துத் தேர்வு செய்யுமாறு நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். "சிறிதளவு காது வெட்டப்பட்டவை, காது கிழிக்கப்பட்டவை, காதில் துவாரமிடப்பட்டவை ஆகியவற்றைக் குர்பானி கொடுக்கக்கூடாது" என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (திர்மிதீ அஹ்மத், அபூதாவூத், நஸயீ). 

நடக்கக்கூடிய, அமரக்கூடிய, பார்க்கக் கூடிய உறுப்புகள் கருமை நிறமுடைய ஓர் ஆட்டை, குர்பானி கொடுப்பதற்காக வாங்கி வருமாறு நபி (ஸல்) கட்டளை இட்டார்கள். (ஆடு வந்ததும்) "ஆயிஷாவே கத்தியை எடுத்து வா!" என்றார்கள். பிறகு, "அதைக் கல்லில் தீட்டு!" என்றார்கள். நான் அப்படியே செய்தேன். பிறகு கத்தியை வாங்கிக் கொண்டார்கள். ஆட்டைக் கீழே படுக்க வைத்து அறுத்தார்கள்.அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) (முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத்)

குர்பானி பிராணிகளை வீட்டில் வளர்ப்பதும் நபி வழியே!
'மதீனாவில் குர்பானி பிராணிகளை நாங்கள் கொழுக்க வைப்போம். (ஏனைய) முஸ்லிம்களும் கொழுக்க வைப்பார்கள்." (புகாரி, தஃலீக்).

ஒரு குடும்பத்துக்கு எத்தனை ஆடுகள் குர்பானி கொடுக்கலாம்?
நபி (ஸல்) அவர்கள் காலத்தில் குர்பானி கொடுப்பது எவ்வாறு அமைந்திருந்தது என்று அபூ அய்யூப் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் 'ஒருவர் தமக்காகவும், தம் குடும்பத்தினருக்காகவும் ஓர் ஆட்டைக் குர்பானி கொடுப்பார். அவர்களும் உண்பர். பிறருக்கும் உண்ணக் கொடுப்பர். மக்கள் பெருமையடிக்க ஆரம்பித்து,  நீர் பார்க்கக்கூடிய (பெருமைக்காகப் பிராணிகளை அறுக்கும்) இந்த நிலை ஏற்பட்டுவிட்டது என்று கூறினார்கள். (திர்மிதீ, இப்னுமாஜா, தப்ரானீ)

"குர்பானி இறைச்சியை நீங்களும் உண்ணுங்கள்! சேமித்தும் வைத்துக் கொள்ளங்கள்; தர்மமும் செய்யுங்கள்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

எனவே, ஒரு குடும்பத்துக்கு ஓர் ஆடு குர்பானி கொடுத்தால் போதுமானது. வசதி படைத்தவர்கள் எத்தனை ஆடுகள் வேண்டுமானாலும் அறுத்துப் பலியிட்டு தர்மம் செய்யலாம். நபி (ஸல்) அவர்கள் நூறு ஒட்டகங்கள் குர்பானி கொடுத்து இருக்கிறார்கள் எனும் அறிவிப்பின் மூலம் கூடுதலாக அறுப்பது ஆகுமானதே என்று விளங்கிக் கொள்ளலாம்.

கூட்டாக ஏழு பேர் சேர்ந்து ஓர் ஒட்டகமோ ஒரு மாடோ குர்பானியாகக் கொடுக்கலாம்.
ஹுதைபியா ஆண்டில் நாங்கள் ஏழு நபர்கள் சார்பாக ஒரு ஒட்டகத்தையும், ஏழு நபர்கள் சார்பாக ஒரு மாட்டையும் குர்பானி கொடுத்தோம். (முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி இப்னுமாஜா)

அறுப்பது பெருநாள் தொழுகைக்கு முன்பா? பிறகா?
"இன்றைய நாளில் நாம் முதலாவதாகச் செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்கு) திரும்பிச் சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்து கொள்வாரோ அவர் நமது வழியில் நடந்து கொண்டார். யார் (தொழுமுன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்திற்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்குக் குர்பானியின் நன்மை எதுவும் கிடையாது" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூதர்தா இப்னு நியார் (ரலி) அவர்கள் (தொழுமுன்) அறுத்துவிட்டார். அவர், "என்னிடத்தில் 'முஸின்னாவை' விடச் சிறந்த ஆறுமாத குட்டி ஆடு உள்ளது. (அதைக் குர்பானி கொடுக்கலாமா?)" என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். "முன் அறுத்ததற்கு இதைப் பகரமாக்குவீராக! (அறுப்பீராக!) எனினும் உமக்குப் பிறகு வேறு எவருக்கும் இவ்வாறு (குர்பானி கொடுக்க)அனுமதியில்லை" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

எங்கு அறுப்பது?
வீட்டிலும் அறுக்கலாம். ஈத்கா எனும் தொழும் திடலிலும் அறுக்கலாம். 
முஸல்லா என்னும் திடலில் நபி(ஸல்) அவர்கள் பலிப் பிராணிகளைஅறுப்பவர்களாக இருந்தனர்.(புகாரி , அபூதாவூத்)
"ஆயிஷா கத்தியைக் கொண்டு வா! அதைக் கல்லில் கூர்மையாக்கு!" எனும் ஹதீஸிலிருந்து வீட்டில் வைத்தும் அறுத்திருக்கிறார்கள் என்பதை விளங்கலாம்.

பெண்கள் அறுக்கலாமா?
ஒரு பெண்மணி (கூர்மையான) கல்லால் ஆட்டை அறுத்து விட்டார். இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போது அதைச் சாப்பிடும்படி கட்டளையிட்டார்கள். (புகாரி)

குர்பானி கொடுக்கும் நாட்கள்
"தஷ்ரிக்குடைய நாட்கள் (துல்ஹஜ் 11, 12, 13) அனைத்தும் அறுப்பதற்குரிய நாட்களாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (தாரகுத்னி, இப்னு ஹிப்பான், அஹ்மத்).
துல்ஹஜ் மாதம் பெருநாள் தினமாகிய பிறை 10இன் பெருநாள் தொழுகைக்குப் பிறகிலிருந்து பிறை 13வரை குர்பானி கொடுக்கலாம்.
அல்லாஹ் மிக அறிந்தவன்!

Monday, September 2, 2013

எதிர்மறைச் சூழலிலும்… நேர்மையாய் இருப்போம்

எதிர்மறைச் சூழலை மிக நுட்பமாய் முறியடிக்கும் வழி நாம்நேர்மறையாய் (positive) நடந்து கொள்வதுதான்.

எல்லா நேரங்களிலும் நம்முடைய சூழல் நாம் விரும்புவதுபோல் அமைந்துவிடுவதில்லை. பல நேரங்களில் எதிர்பாராமலே நாம் எதிர்மறைச் சூழலில் சிக்கிக்கொள்கிறோம்.
- நம்மைப் பற்றி பிறர் மாறுபாடாய் பேசும் போதும்,
- நியாயமான தேவைகளுக்கும் மறுப்புகளைச் சந்திக்கும் போதும்,
- நடந்து விடும் என்று எதிர்பார்த்து காத்திருக்கும்நேரத்தில் ஏமாற்றம் ஏற்படும் போதும்,
- அவசரமான நேரத்தில் அவசியமில்லாமல் நம் நேரத்தை பிறர்வீணடிக்கும் போதும்,
- நாம் காரணமாய் இல்லாத நிலையில் நம் மீது குற்றமோ, பழியோசுமத்தப்படும் போதும்,
- நம்முடைய உழைப்பும், ஆற்றலும், பணமும், நேரமும் மற்றவர்களால்அல்லது புறச் சூழல்களால் விரயமாகும் போதும்,
-அநியாயங்களைக் கண்டும் வாய் மூடி மௌனியாய்ச் செல்ல நேரிடும் போதும்
என இன்னும் பல்வேறு நேரங்களில் நாம் எதிர்மறையான சூழ்நிலைக்குதள்ளப் படுகிறோம். 

இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இயல்பாய் இருப்பதென்பதும், இயல்பு நிலைமாறாமல் நடந்து கொள்வதென்பதும் கடினமானதுதான்.

ஒவ்வொரு சூழலுக்கும், (முடியும் என்றால்) அதேயளவு எதிர்வினைகாட்டக் கூடியவர்களாகத் தான் பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள். ஆனால் எதிர்மறைச் சூழலில்நாமும் எதிர்மறையாகவே நடந்து கொண்டால் நிலைமை இன்னும் மோசமாவதோடு சம்பந்தப்பட்டவர்கள்நம்மோடு பகையாகி விடுவதற்கான வாய்ப்பும், நம்மிடமோ, நமக்கு செய்யவேண்டிய பணிகளிலோ மேலும்மோசமாய் நடந்து கொள்ளவும் நேரிடலாம்.

எதிர்மறையாய் நாம் நடந்து கொண்ட நாள் முழுவதுமே சினத்தாலும்,அதிருப்தியாலும் நிரம்பி நாம் துன்புற வேண்டியுள்ளது.

பின்பற்றுவதற்குச் சற்று கடினம்தான் என்றாலும் எதிர்மறைச் சூழல்களிலும்நாம் நிலை மாறாமல் இருப்பது பெரிதும் அவசியமானதாகும். குறைந்த பட்சம் கோபம், வெறுப்பு,அலட்சியம் போன்றவற்றை வெளிப்படுத்தாமல், தேவைப்படும் நிலையில் வருத்தத்தை வெளிப்படுத்திநம் கருத்தைத் தெரிவிக்கலாம். எதிர்மறைச் சூழலை மிக நுட்பமாய் முறியடிக்கும் வழி நாம்நேர் மறையாய் நடந்துகொள்வதுதான்.

நேர்மறையாய்நடந்து கொள்ளும் வழி முறைகளைப் பார்ப்போம்.
- அமைதியிழந்து காணப்படும் நேரத்தில் பதிலளிப்பதை தவிர்க்கலாம்.நாம் ஏதோ சலனத்தில் இருக்கிறோம் என்பதை மென்மையாய் தெரிவிக்கலாம்.

- குரலை உயர்த்திப் பேசுபவர்களிடம் நாம் அதே தொனியில்பேச வேண்டுமென்பதில்லை. அப்படிப் பேசினால் நிலைமை விபரீதமாகுமேயன்றி, இரு சாரார்க்குமேநன்மை ஏற்படாது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர நாம் மென்மையான குரலில் பேசுவதே உகந்ததாகும்.

- 'எதிர்த்தரப்பார் அப்படி ஆவேசப்படும் போது நான் மட்டும்ஏன் அடங்கிப் பேச வேண்டும்?' என்ற கேள்வி நம் மனத்தில் எழக்கூடும். இது அடங்கிப் போவதல்ல.நிலைமையை அடக்குவதாகும்.

- பிரச்னைகள் தீர்ந்த பின் யோசித்துப் பார்த்தால் நாம்தான்உயர்வாக, கண்ணியமாக நடந்து கொண்டோம் எனும் போது பாராட்டும், பெருமிதமும் கிடைப்பதை உணரலாம்.

-பாராட்டிற்காகவோ, பெருமிதத்திற்காகவோ இல்லையென்றாலும்கடைப்பிடிக்க வேண்டிய சிறந்த அணுகுமுறை மென்மைதான்.

- எதிர்மறைச் சூழலில் நமக்குப் பலரும் ஆலோசனைகள் சொல்வார்கள்.'எனக்குத் தெரியாததையா சொல்லி விட்டார்கள்?' என்று முற்றிலும் புறந்தள்ளி விடாமல் நாம்இயல்பாய் இருக்கவும், நேர்மறையாய் செயல்படவும் எது சிறந்த ஆலோசனையோ அதனை ஏற்றுக் கொள்ளலாம்.

- சில நேரங்களில் நம் குழப்பத்தை அதிகரிப்பது போல் ஒவ்வொருவரும்ஒவ்வொன்றைக் கூறுவார்கள். சூழலின் கடுமையை அதிகரிப்பது போல் யார் பேசினாலும் அவரை மதிக்கவேண்டியநிலையிலிருப்பதைப் பற்றி கவலைப்படாமல் தவிர்த்து விடலாம்.

- மற்றவர்களின் கருத்துக்களில், செயல்பாடு(நடத்தை-Attitude)களில்நமக்கு உடன்பாடில்லை என்றாலும் அவைகளுக்காக அவர்களை உள்ளுக்குள் நாம் வெறுப்பதாயிருந்தாலும்எதிரில் எதனையும் வெளிப்படுத்துதல் கூடாது. அதற்கும் மேலாக அவர்களிடமும் இயல்பாகவேநடந்து கொள்ளுதல் நல்லது.

- நம்முடைய எதிர்மறையான சிந்தனைகளோ, செயல்பாடுகளோ மற்றவரைக்காட்டிலும் நமக்குத் தான் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நினைவில் நிறுத்துதல்அவசியம்.

- 'ஒவ்வொரு இடர்ப்பாட்டிலும் ஒரு வாய்ப்பு மறைந்துள்ளது'என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறுகிறார். எதிர்மறைச் சூழலிலும் நமக்கான வாய்ப்பு எதுவெனபார்க்கலாம்.

- நம்மால்தான் தவறு நிகழ்ந்தது எனும்போது நேர்மையாய்அதனை ஒப்புக் கொள்ளுதல் வேண்டும்.
-அறிந்தோ அல்லது அறியாமலோ நாம் தவறு செய்து விடும்போதுமனத்தளர்ச்சி அடைய வேண்டியதில்லை. 'வாழ்வில் தவறுகள் செய்வதால் கழியும் நேரமாவது ஏதும்செய்யாமல் சும்மாவே கழித்த நேரத்தைவிட மதிப்பு வாய்ந்தது' (எல்லாத் தவறுகளும் இதில்அடங்கிவிடாது என்பதில் கவனம் இருக்கட்டும்) தவறு நேரும் போதுதான் சரி எது என்பதில் தெளிவு பிறக்கிறது.அனுபவங்கள் கிடைக்கின்றன. அனுபவங்கள்தான் நம்மைச் சரியாக வழிநடத்துகின்றன.

- எதிர்மறைச்சூழலில் நாமிருக்கும்போது நம்முடைய நலம் விரும்பும்நண்பர்களை அழைத்து நம் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளலாம். சரியான ஆலோசனைகளைக் கேட்கலாம்.
நமக்குப் பிடித்த புத்தகங்களை எடுத்துப் புரட்டிப் பார்க்கலாம்.

-ஆழ்ந்து மூச்சுவிடுதல். கண்களை மூடியபடி சிறிதுநேரம்அமைதியைக் கடைப்பிடித்தல். திக்ரு செய்தல், குர்ஆனை பொருளுணர்ந்து ஆழ்ந்து படித்தல்.குளிர்ந்த நீரைப் பருகுதல் போன்றவை நம்மை உடல், மன ரீதியாக ஆசுவாசப்படுத்தும்.

- நாம் எல்லோரையும் எல்லா நேரத்திலும் திருப்தியுறச்செய்ய இயலாது. நாமென்பதில்லை. யாராலுமே அது முடியாது. எனவே சில சமயங்களில் வேண்டியமனிதர்களையோ, பொருள் பணத்தையோ, ஏன் நட்பையோ கூட இழக்கவேண்டி வரலாம். அதற்காக இடிந்துபோய்விடுவதோ, வாட்டமாகவே காணப்படுவதோ தவிர்க்கப்பட வேண்டும்.

- சில இழப்புகள் பெரும் நிம்மதியைக் கூட கொண்டுவந்துசேர்க்கலாம். எப்போதும் நமக்கு இன்னலை ஏற்படுத்துபவர்கள் என்னதான் தேவைப்படுபவர்களாகஇருந்தாலும் அவர்களை இழப்பதற்கு நாம் நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

- அதற்குப் பின்னர் நேர்மறையான மனிதர்களை நோக்கி நம்முடையகவனத்தை திசை திருப்பலாம்.
இன்பமும் துன்பமும் கலந்துதான் வாழ்க்கை என்பது எல்லோரும்அறிந்திருப்பதுதான். இன்பத்தை மகிழ்வோடு கொண்டாடுகின்ற நாம் துன்பத்தைக் கொண்டாட இயலாது.ஆனால் எப்படிப்பட்ட சிக்கலான சூழ்நிலைகளையும் எதிர் கொள்கின்ற பக்குவம் பெற்று விட்டோமெனில்துன்பம் என்பது ஏது?

அல்லாஹ் நம் அனைவரையும் பக்குவபட வைப்பானாக! ஆமீன்!!!


நன்றி: முஹம்மது கவுஸ்