மகத்துவமும்
பெருமதிப்புமிக்க அளவில்லா கருணையாளன் வல்ல நாயன் அல்லாஹ் தன்
திருமறையில்:
நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே
துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும்
இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும்.
சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. (அல்குர்ஆன்: 9: 71)
இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவரும்
தங்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், சந்தோசமாகவும் இருக்க வேண்டும் என்று தான் விரும்புவார்கள். அந்த சந்தோசமான வாழ்க்கை அமைய
வேண்டுமானால் அவர்கள் வசிக்கும் இல்லம் சந்தோசம் பொங்கும் இல்லமாக
இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் நாள் முழுவதும் வெளியில் சென்று உழைத்து விட்டு களைப்புடன்
வருபவர்களுக்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும். அதை தான்
எல்லோரும் எதிர்பார்ப்பார்கள்...
ஆனால் இதற்கு மாற்றமாக ஒரு இல்லம்
இருந்து விடுமானால் மிகப் பெரும் மனக்குழப்பத்திற்கு ஆளாகி பலவிதமான
நோய்களுக்கு ஆளாகி கஷ்டப்பட வேண்டிய நிலை எற்பட்டு விடும்.
ஒரு இல்லத்தின் சந்தோசத்தில் முக்கிய பங்காற்றுபவர்கள் கணவனும் மனைவியும் தான்.அதனால் தான்
முக்காலத்தையும் அறிந்த இறைவன், அந்த இருவருக்குள்ளும் அன்பையும் பாசத்தையும் ஏற்படுத்தி
யுள்ளான்.
இன்றைய காலகட்டத்தில் நாகரீகத்தின்
உச்சாணிக் கொம்பில் இருக்கிறோம் என்று பீற்றிக் கொண்டு உலா வரும்
மேலைநாடுகளில் குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் குடும்ப அமைப்புக்கள், அவர்களின் தவறான நடைமுறை வாழ்க்கையில் தாறுமாறாகிப்போன நிலையில் அந்த குடும்ப
அமைப்பினர் மனநிம்மதியை தேடி அலைவதைப் பார்க்கிறோம். கணவன் மனைவிக்குள் உறவு சரியில்லை. பெற்றோர்
பிள்ளைகள் இடையே பரஸ்பரம் பாசம் அன்பு என்பதெல்லாம் இருக்கின்ற இடம்
தெரியாமல் போய், தனி மனித உரிமை, சுதந்திரம் என்ற பெயரில் பெற்றோர்
பிள்ளைகளின் இடையே சண்டைகளும் சச்சரவுகளும் ஏற்பட்டு குடும்பத்தின்
நிம்மதி கெடுகின்றது.
தாங்கள் பெற்று, கஷ்டப்பட்டு வளர்த்த பிள்ளைகள் வளர்ந்த பின் அவர்கள் செய்யும் தவறான நடவடிக்கைகளை
கண்டிக்கும் பட்சத்தில் பெற்றோர்கள் மீது காவல்துறையில் புகார் செய்வதும், நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து தங்களை பெற்று வளர்த்த பெற்றோர்களையே சிறைச்சாலைக்கு
அனுப்பும் அவலம் மேலைநாடுகளில் சர்வசாதாரணம்.
நீதிமன்றங்கள்கூட பெற்றோர்களின்
மாண்புகளை உணராமல் தனி மனித சுதந்திரம் என்ற பெயரில் தண்டனை
வழங்குவதையும் ஊடகங்களில் இருந்து அறிந்து வருகிறோம்.
இந்த தவறான வாழ்க்கை முறையை வெறுத்த
சிலர் உண்மையை தேடி மனநிம்மதியை தேடி இஸ்லாத்தை நோக்கி வருவதையும்
காண்கிறோம்.
ஒரு இல்லம் என்றால், அந்த இல்லம் மன அமைதி அளிக்கக் கூடியதாக அல்லாஹ்வின் அருள் பெற்றதாக
இருக்க வேண்டும். அதுவல்லாமல்
சிறைச்சாலைப் போன்றோ அல்லது உதவி முகாம்கள் போன்றோ ஒரு இல்லம்
இருக்கக்கூடாது.
மறுமையின் அதிபதியாம் அல்லாஹூ தஆலா தன் திருமறையில் இதைப்பற்றி :
உங்கள் வீடுகளில் உங்களுக்கு அல்லாஹ்
நிம்மதியை ஏற்படுத்தினான். கால்நடைகளின் தோல்களிலிருந்து உங்களுக்குக்
கூடாரங்களை ஏற்படுத்தினான். உங்கள் பிரயாணத்தின் போதும், ஊரில் நீங்கள் தங்கியிருக்கும் போதும் அவற்றை எளிதாக எடுத்துச் செல்கிறீர்கள். செம்மறி ஆட்டு
உரோமங்கள், வெள்ளாட்டின் உரோமங்கள் ஒட்டகத்தின் உரோமங்கள் ஆகியவற்றிலிருந்து
ஆடைகளையும் குறிப்பிட்ட காலம் வரை (பயன்படும்)வசதிகளையும்
எற்படுத்தினான். (16:80)
இஸ்லாமிய இல்லம் என்பது, கணவன் மற்றும் மனைவி இருவரும் பொறுப்புமிக்கவர்களாகவும், ஒருத்தருக் கொருத்தர் நம்பிக்கை உடையவர்களாகவும் இருக்க வேண்டும்.ஏனென்றால் அவ்விருவரும்
தான் அந்த இல்லத்தின் தூண்களாவார்கள். அவர்கள் ஒருவரை யொருவர் புரிந்து கொண்டு
உண்மையான நேசத்துடன் உள்ளும் புறமும் திகழ வேண்டும்.
எதிர்கால சந்ததியினர், கண்ணியமானவர்களாகவும், மதிப்புமிக்கவர்களாகவும் திகழ்வதற்கு
ஊன்றுகோலாக அமைதல் வேண்டும். இதைப்போன்ற இல்லங்கள்தான் நல்ல பண்புள்ள, நாகரீகமுள்ள சமுதாயத்தை உருவாக்க முக்கிய பங்காற்றும்.
இஸ்லாமிய இல்லம் என்பது தூயமார்க்கத்தை
நிலை நாட்டும் எஃகு கோட்டையாக திகழ வேண்டும். எந்தளவுக்கு
என்றால் உங்கள் எதிரிகள் உங்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தாத வகையில் அமைதல்
வேண்டும்.
நம் உயிரினும் மேலான அல்லாஹ்வின்
தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களே!
உங்களின் பொறுப்புக்கள் பற்றி மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள்.
ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே! அவர் தன் குடிமக்கள் பற்றி
விசாரிக்கப்படுவார். ஆண் தன் குடும்பத்திற்கு பொறுப்பாளியாவான்.
அவன் தன் பொறுப்புக்களைப் பற்றி விசாரிக்கப்படுவான். பெண் தன் கணவன்
வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். தன் பொறுப்புக்குட்பட்டவைக் குறித்து
விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் எஜமானனின் உடமைகளுக்கு பொறுப்பாளியாவான். அவனும்
தன் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான் (அப்துல்லாஹ் இப்னு
உமர் (ரலி) புகாரி 2409)
இஸ்லாமிய இல்லத்திற்கு அழகிய உதாரணமாக
திகழ்ந்தது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் இல்லம் என்றால் அது
மிகையாகாது. அந்த இல்லத்தில் ஆடம்பரம் இருந்ததில்லை. பொருட்கள்
வீண்விரயமாக்கப் பட்டதில்லை.அல்லாஹ்வை நினைவு கூறும் ஒரு இல்லமாக விளங்கியது.
அதேபோல் இஸ்லாமிய இல்லத்தின்
கதாநாயகர்களாக இருக்கக்கூடிய பெற்றோர்கள், கண்ணியமானவர்களாக, மார்க்கத்தில் உண்மையாளர்களாக இருக்க வேண்டும். அப்படி இல்லாதபட்சத்தில் அந்த இல்லமும் அதில்
வளர்ந்து வரும் குழந்தைகளும் நஷ்டவாளிகளாக வழிகேட்டில் விழுந்து
விடுவார்கள்.
மகத்துவமிக்க கண்ணியவான் அல்லாஹ் தன்திருமறையில்:
(முஹம்மதே) தொழுமாறு உமது குடும்பத்தினரை ஏவுவீராக! அதில் (ஏற்படும் சிரமங்களை) சகித்துக் கொள்வீராக!
உம்மிடம் நாம் செல்வத்தைக் கேட்க வில்லை. நாமே உமக்குச் செல்வத்தை
அளிக்கிறோம். (இறை) அச்சத்திற்கே (நல்ல) முடிவு உண்டு. (அல்குர்ஆன் 20:132)
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒவ்வொரு குழந்தையும் இயற்கை
மார்க்கத்தில் (இஸ்லாம்) தான் பிறக்கின்றன. அவர்கள் யூதனாகவோ, கிருஸ்தவனாகவோ அல்லது மஜூஸியாகவோ ஆவது அவர்களின் பெற்றோர்களின் வளர்ப்பினாhல் தான் (அபூஹூரைரா(ரலி) புகாரி, முஸ்லிம்)
மேலும் அந்த கதாநாயகர்களான பெற்றோர்கள், அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவு கூறக் கூடியவர்களாகவும் தங்;களின் சந்ததிகளின் நல்வாழ்விற்கு இறைவனிடம்
கையேந்துபவர்களாகவும் இருப்பார்கள் என்று மார்க்கம் கூறுகிறது.
எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும் மக்களிலிருந்தும் எங்களுக்குக் கண்
குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாக எங்களை ஆக்குவாயாக! என்று
கூறுகின்றனர். (அல்குர்ஆன் 25:74)
மேலும், என் இறைவா!
என்னையும், என் சந்ததிகளையும் தொழுகையை
நிலைநாட்டுவோராக ஆக்குவாயாக! எங்கள் இறைவா! எனது பிரார்த்தனையை ஏற்பாயாக!
எங்கள் இறைவா! என்னையும் எனது
பெற்றோரையும் நம்பிக்கைக் கொண்டோரையும் விசாரணை நடைபெறும் நாளில்
மன்னிப்பாயாக! (அல்குர்ஆன்: 14:
40-41)
தற்கொலை செய்து கொண்டு தன்னுடைய உயிரை
மாய்த்துக் கொள்வது, போதைப்பொருட்கள் உபயோகப் படுத்துவது போன்ற தவறான
செயல்களுக்கெல்லாம் முக்கிய காரணம், அத்தகைய இல்லங்களில் இஸ்லாமிய
மார்க்கப் போதனைகள் போதிக்கப்படாமல் இருந்ததே காரணமாகும். இஸ்லாமிய
மார்க்கச் சட்டங்களுக்குட்பட்ட இல்லமாக திகழ்ந்தால் இப்பேர்ப்பட்ட செயல்கள் நடைபெறாது என்பது திண்ணம்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்கள் வீடுகளை மண்ணறைகளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். எந்தவொரு வீட்டில், சூரத்துல் பகரா ஓதப்படுகிறதோ அந்த வீட்டில் ஷைத்தான் நுழைய மாட்டான். (அபூஹூரைரா(ரலி) முஸ்லிம், அஹ்மது, திர்மிதி, நஸயி)
அதாவது ஒரு இஸ்லாமிய இல்லத்தில் இருக்க
வேண்டிய முக்கியமான அம்சம், அல்லாஹ்வும் அவனது தூதரும் எதைச்
சொன்னார்களோ அதை எந்தவிதமான விருப்பு வெறுப்புமின்றி
நடைமுறைப்படுத்தக்கூடிய இல்லமாக இருக்க வேண்டும். அதனடிப்படையில் அமைந்தால் தான் அது இஸ்லாமிய இல்லமாகும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் தன் திருமறையில்:
உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்.
முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல்
திரியாதீர்கள். தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்.
அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள். இவ்வீட்டினராகிய
உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப்படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான்.
உங்கள் வீடுகளில் கூறப்படும்
அல்லாஹ்வின் வசனங்களையும், ஞானத்தையும் நினையுங்கள்.அல்லாஹ்
நுணுக்கமானவனாகவும், நன்கறிந்தவனாகவும் இருக்கிறான். (அல்குர்அன் 33:33-34)
மேலும், அல்லாஹ்வும்
அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும்போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும்
பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை.
அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு
விட்டார்.
அல்லாஹ்வை நினைவு கூறும் இல்லத்தில் மகிழ்ச்சியும் சந்தோசமும் பொங்கும் என்று இஸ்லாம் சொல்லிக்
காட்டுகிறது.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வின் திருநாமங்கள் ஓதப்பட்டு
நினைவு கூறப்பட்டு கொண்டிருக்கும் வீட்டிற்கும் அல்லாஹ்வை மறந்த
வீட்டிற்கும் உள்ள உதாரணம், உயிருள்ள மனிதனுக்கும், இறந்த மனிதனுக்கும் உள்ள வித்தியாசம்
போலாகும். (அபுமூசா(ரலி) புகாரி, முஸ்லிம்)
மேலும், உங்கள்
வீடுகளில் தொழுது கொள்ளுங்கள். கடமையில்லாத சுன்னத்தான தொழுகைகளை
உங்கள் வீடுகளில் தொழுது கொள்வது சிறந்தது. (ஜைத் பின் தாபித்(ரலி) முஸ்லிம்)
அதேபோல் தான் மட்டும் அல்லாஹ்வைத்
தொழுது கொண்டு, தனது மனைவி மக்களைப் பற்றி கவலைக் கொள்ளாமல் இருக்க
இஸ்லாத்தில் அனுமதியில்லை. தன்னுடைய குடும்பத்தார்களையும் அதன்படி
செயல்பட தூண்டக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.
அல்லாஹ் தன் திருமறையில்:
நம்பிக்கைக் கொண்டோரே! உங்களையும்,உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டும்
காத்துக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும்
கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய
மாட்டார்கள். கட்டளையிடப் பட்டதைச் செய்வாhர்கள். (அல்குர்ஆன் 66:6)
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள்
தன்னுடைய மனைவிமார்களை எழுப்பி விடக்கூடியவர்களாக இருந்துள்ளார்கள்.
ஆயிஷாவே! எழுந்திரு! வித்ரை தொழுது
கொள்! (ஆயிஷா(ரலி) புகாரி முஸ்லிம்)
தன் மனைவியை இரவுத் தொழுகைக்கு எழுப்பிய மனிதருக்கு அல்லாஹ் அருள்புரிவானாக! தன் கணவனை இரவுத்
தொழுகைக்கு எழுப்பும் பெண்ணிற்கு அல்லாஹ் அருள் புரிவானாக! (அபூஹூரைரா(ரலி)
அபுதாவுத், நஸயி, இப்னுமாஜா)
ஆகவே சகோதர சகோதரிகளே! உங்களின்
இல்லங்கள் இஸ்லாமிய மணம் கமழும் இல்லமாக அமைய அல்லாஹ் அருள்புரிவானாக!
நன்றி : M.NASEER ALI
No comments:
Post a Comment