அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Thursday, July 11, 2013

வேறுநாட்டுக்குச் செல்லும் போது பிறைவித்தியாசம் ஏற்பட்டால்?

வேறுநாட்டுக்குச் செல்லும் போது பிறைவித்தியாசம் ஏற்பட்டால்? 

கேள்வி: சவுதியிலிருந்து ரமலான் மாதம் பாதியில் ஊருக்கு வருபவர் ஊரில் 30 வது நோன்பு அன்று அவருக்கு 31 வது நோன்பு. அவர் அன்று நோன்பை வைக்கலாமா அல்லது ரமலான் நோன்பு 30 மட்டும் தான் வைக்க முடியும் என்று கருத்து இருந்தால் அவர் கடைசி நோன்பைப் பிடிக்காமல் இருக்கலாமா ? 

பதில்: தலைப்பிறையைக் காண்பதில் ஒரு நாள் வித்தியாசம் ஏற்பட்டு சவுதியில் ரமலானை அடைந்து அதன் பிறகு மாத இடையில் ஊருக்கு வந்தவருக்கு இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது. பொதுவாக தொழுகை நோன்பு போன்ற அனைத்து காரியங்களையும் நாம் எந்த ஊரில் இருக்கிறோமோ அந்த ஊரின் நேரக்கணக்கின் அடிப்படையில் தான் அமைக்க வேண்டும். ஒரு ஊரில் இருந்து கொண்டு வேறொரு ஊரின் அல்லது நாட்டின் நேரக்கணக்கைப் பின்பற்ற முடியாது. இந்தியாவில் இருந்து கொண்டு சவதி நேரத்துக்கு தொழ முடியாது என்பது போன்று அங்குள்ள நேரக்கணக்கின் அடிப்படையில் இந்தியாவில் நோன்பு நோற்கவோ துறக்கவோ முடியாது. எனவே எந்த ஊரில் இருக்கிறோமோ அந்த ஊரின் நேரக் கணக்கின் அடிப்படையில் நம்முடைய தொழுகை நோன்பு போன்ற காரியங்களை அமைத்துக் கொள்ள வேண்டும். இதனடிப்படையில் சவுதியிலிருந்து இந்தியா வந்து சோ்ந்த பிறகு இந்தியாவின் நேரக்கணக்கைப் பின்பற்றி அவர் நோன்பு நோற்க வேண்டும். அவ்வாறு நடந்து கொள்ளும் போது முப்பத்து ஒன்றாவது நோன்பு வைக்க வேண்டிய நிலை வந்தால் என்ன செய்வது? மாதத்தைப் பற்றி இஸ்லாம் கூறும் போதனையை அறிந்து கொண்டால் இந்தப் பிரச்சனைக்கு தீர்வைக் காணலாம். ஒரு மாதம் என்பது இருபத்து ஒன்பது நாட்களாகவும் இருக்கும். முப்பது நாட்களாகவும் இருக்கும். முப்பத்து ஒரு நாட்கள் கிடையாது என்று இஸ்லாம் சொல்கிறது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மாதம் என்பது இருபத்து ஒன்பது நாட்களாகவும் இருக்கும். முப்பது நாட்களாகவும் இருக்கும். பிறையை நீங்கள் கண்டால் நோன்பு வையுங்கள். அதைப் பார்த்தே நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேகமூட்டம் குறுக்கிட்டால் எண்ணிக்கையை முழுமைப்படுத்துங்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : நஸாயீ (2109) ஒரு மாதத்திற்கு அதிக பட்சம் முப்பது நாட்கள் தான். முப்பத்து ஒரு நாட்கள் என்பது கிடையாது என்பதை இந்த நபிமொழியிலிருந்து அறிந்து கொள்ளலாம். உங்களில் யார் ரமலான் மாதத்தை அடைவாரோ அவர் நோன்பு நோற்கட்டும் என்ற வசனத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட நபர் சவுதியிலேயே ரமலான் மாதத்தை அடைந்து விட்டதால் அங்கு முதல் நோன்பு வைத்திருக்கிறார். இது சரியான வழிமுறையாகும். அதன் பிறகு பாதியில் அல்லது இறுதியில் ஊருக்கு திரும்பி வந்த போது ஊரில் உள்ளவர்களுக்கு முப்பதாவது நோன்பாகவும் இவருக்கு முப்பத்து ஒன்றாகவும் இருந்தால் அந்த நோன்பை அவர் நோற்கக் கூடாது. ஏனெனில் மாதம் என்பது அதிக பட்சம் முப்பது நாட்கள் தான் என்ற நபிமொழி இருப்பதால் அத்துடன் அவருக்கு ரமலான் மாதம் முடிந்து விட்டது. எனவே இவர் தனக்கு மாதம் பூர்த்தியான பிறகு நோன்பு நோற்காமல் காத்திருந்து ஊர் மக்கள் பெருநாள் கொண்டாடும் போது இவரும் சேர்ந்து பெருநாள் கொண்டாடுவார்.

thanks to onlinepj.com

Monday, July 8, 2013

புறம் பேசுதல் என்றால் என்ன?

  புறம் பேசுதல் என்றால் என்ன? என்று நீங்கள் அறிவீர்களா?" என நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்) கேட்டார்கள். அதற்கு அவர்கள் "அல்லாஹ்வும் அவன் தூதருமே நன்கறிந்தவர்கள்" எனக் கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் "(புறம் பேசுதல் என்பது) நீ உம் சகோதரனைப் பற்றி அவன் விரும்பாததைக் கூறுவதாகும் என்று கூறினார்கள். நான் கூறுவது என் சகோதரனிடம் இருந்தாலுமா? எனக் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், நீ கூறுவது அவனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசி விட்டாய். நீ கூறுவது அவனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி அவதூறு கூறி விட்டாய்எனக் கூறினார்கள். 
அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்.

யாருடைய இஸ்லாம் மிகவும் சிறந்தது?


அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: 
நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன்,
"யாருடைய இஸ்லாம் மிகவும் சிறந்தது?”. 

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எவருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவரே (சிறந்தவர்; அவருடைய இஸ்லாமே சிறந்தது)" 
என்று பதிலளித்தார்கள்.
- நூல்:புஹாரி

ரய்யான் எனும் சொர்க்க வாசல்


சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே?’ என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல்கள் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழைய மாட்டார்கள்என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி), நூல்: புகாரீ.

Monday, July 1, 2013

ரமலான் நோன்பு


1) முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் ஏன் நோன்பு நோற்க வேண்டும்?
 ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதை அல்லாஹ் முஸ்லிம்களுக்கு கடமையாக்கியிருக்கின்றான்.
“ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்” (அல்-குர்ஆன்  2:183)
“உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்” (அல்-குர்ஆன்  2:185)

2) ரமலான் நோன்பு ஐம்பெரும் கடமைகளுள் ஒன்றான வணக்கமா?
இஸ்லாம் மார்க்கம் ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பதை முஸ்லிம்கள் அவசியம் நிறைவேற்ற வேண்டிய ஐம்பெரும் கடமையான வணக்கங்களுள் ஒன்றாக ஆக்கியிருக்கிறது.
‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாலானில் நோன்பு நோற்றல், ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

3) ரமலான் மாதத்தின் சிறப்புகள் யாவை?
ரமலான் மாதத்தின் சிறப்புகள்:
  1. நரகத்தின் கதவுகள் மூடப்படும். அதில் ஒரு கதவும் திறந்திருக்காது.(திர்மிதீ)
  2. சுவர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படும், அதில் ஒரு கதவும் மூடப்பட்டிருக்காது. (திர்மிதீ)
  3. ரமளான் (மாதம்) வந்துவிட்டால் அருள்களின் வாசல்கள் திறக்கப்படுகின்றன.(நஸயீ)
  4. ரமளான் மாதத்தின் முதல் இரவிலேயே ஷைத்தான்களுக்கும் கெட்ட ஜின்களுக்கும் விலங்கிடப்படும்.(திர்மிதீ)
  5. ஒரு இறை அழைப்பாளர் “நன்மை செய்பவர்களே! முன் வாருங்கள், பாவம் செய்பவர்களே! நிறுத்திக் கொள்ளுங்கள்!” என்று உரக்கச் சொல்வார். (திர்மிதீ)
  6. அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் யார் நோன்பு நோற்கின்றாரோ அவரின் முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும்.(புகாரி)
  7. நோன்பு மாதத்தில் உம்ராச் செய்வது ஹஜ் செய்வதற்குச் சமமாகும். (நஸயீ)
  8. ஆயிரம் மாதங்களை விட மகத்துவமிக்க ஓர் இரவு (லைலத்துல் கத்ர்) இம்மாதத்தில் தான் இருக்கிறது.
  9. ரமலானின் கடைசி இரவில் நோன்பாளிகளுக்கு மன்னிப்பு வழங்கப்படுகின்றது
  10. ரமலானின் ஒவ்வொரு இரவிலும் அல்லாஹ் நரகிலிருந்து சிலரை விடுதலை செய்கின்றான். (இப்னுமாஜா)
  11. புனிதமிக்க அல்-குர்ஆன் ரமலானில் தான் இறக்கியருளப்பட்டது. (2:185)

4) நோன்பு நோற்பதன் சிறப்புகள் யாவை?
நோன்பு நோற்பதன் சிறப்புகள்
  1. நோன்பு கெட்ட செயல்களில் இருந்து பாதுகாக்கும் (புகாரி)
  2. நோன்பு நரகத்திலிருந்து பாதுகாக்கும் ஒரு கேடயமாகும். (அஹ்மத்)
  3. நோன்பு சுவர்கத்திற்குள் நுழைவதற்கு காரனமான அமலாக இருக்கிறது (நஸயீ)
  4. நோன்பு அல்லாஹ்விடத்தில் பரிந்துரை செய்யும் (அஹ்மத்)
  5. நோன்பாளிகள் மட்டுமே ரய்யான் என்னும் வாசல் வழியாக சுவனத்திற்குள் பிரவேசிப்பார்கள் (புகாரி)
  6. நோன்புக்குரிய கூலியை அல்லாஹ்வே கொடுக்கின்றான். (திர்மிதி)
  7. நோன்பு தக்வாவுக்கு (அல்லாஹ்வை பயப்படுவதற்கு) முக்கிய காரணமாக அமைகின்றது. (2:183)
  8. நோன்பாளியின் வாய்வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரி வாடையை விட மிக நறுமணமுள்ளது. (புகாரி)
  9. நோன்பாளிகள் நோன்பு திறக்கும் வரை அவருக்காக மலக்குகள் பாவமன்னிப்பு தேடுகின்றனர்.
  10. நோன்பாளிகளின் பிரார்த்தனைகள் அல்லாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. (பைஹகி)

5) நோன்பு யாருக்கு கடமை?
புத்தி சுவாதீனமுள்ள, பருவமடைந்த, ஊரில் இருக்கக்கூடிய நோன்பு நோற்க சக்தியுள்ள ஒவ்வொரு முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் நோன்பு நோற்பது கடமையாகும்.

6 ) நோன்பை விடுவதற்கு யாருக்கு சலுகை இருக்கிறது? இந்த சலுகைகளையுடையவர்கள் என்ன நோன்பு நோற்பதற்கு பரிகாரமாக என்ன செய்ய வேண்டும்?
நோன்பை விட்டுவிட சலுகைகளையுடையவர்கள்:
  1. தற்காலிக நோயாளி (குணமாக கூடிய நோயாளி): நோன்பு நோற்பது இவருக்கு சிரமமாக இருந்தால் இவருக்கு நோன்பை விட்டுவிட சலுகை இருக்கிறது. ஆயினும் விடுபட்ட நோன்பை பின்னர் நோற்க வேண்டும்.
  2. நிரந்தர நோயாளி: நோய் குணமாகாது என்ற அளவிற்கு நிரந்தர நோயாளியாக இருப்பவர் நோன்பு நோற்பது கட்டாயமில்லை. ஆயினும் அவர் அதற்கு பகரமாக ஒவ்வொரு நாளும் ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும். 
  3. பயணி: பயணிகளுக்கு அவர் தன் ஊருக்கு திரும்பி வரும்வரை நோன்பை விட்டுவிட சலுகையிருக்கிறது. பிரயாணி தன் பிரயாணத்தை முடித்துக் கொண்டதும் விட்ட நோன்புகளை நோற்க வேண்டும்
  4. கர்ப்பிணிப்பெண் மற்றும் பாலூட்டும் தாய்: இவர்கள் நோன்பு நோற்பதினால் தனக்கோ அல்லது குழந்தைக்கோ ஏதும் ஆபத்து ஏற்படுமென்று பயந்தால் நோன்பை விட்டுவிடலாம், இவர்கள் குழந்தையை பெற்றெடுத்ததற்கு பிறகு அல்லது பாலூட்டியதற்கு பிறகு விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.
  5. நோன்பு நோற்க இயலாத முதியவர்கள்: இவர்களுக்கு நோன்பை விடுவதற்று அனுமதி உண்டு. இவர்கள் ஒரு நாளைக்கு ஒரு ஏழைக்கு வீதம் உணவளிக்க வேண்டும். அல்லாஹ் நன்கறிந்தவன்.

7) மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் என்ன செய்யவேண்டும்?
மாதவிடாயின் போது நோன்பு நோற்பது தடை செய்யப்பட்டுள்ளது. மாதவிடாயின் போது விடுபட்ட நோன்புகளை ரமலானுக்குப் பிறகு நோற்க வேண்டும்.

8) ரமலான் மாதத்தில் ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றனவா?
“ரமளான் மாதம் வந்துவிட்டால் சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. நகரத்தின் கதவுகள் மூடப்பட்டு விடுகின்றன. ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகிறது” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), புகாரி)
ரமளான் மாதத்தின் முதல் இரவிலேயே ஷைத்தான்களுக்கும் கெட்ட ஜின்களுக்கும் விலங்கிடப்படும். நரகத்தின் கதவுகள் மூடப்படும். அதில் ஒரு கதவும் திறந்திருக்காது. சுவர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படும், அதில் ஒரு கதவும் மூடப்பட்டிருக்காது. இன்னும் ஒரு இறை அழைப்பாளர் “நன்மை செய்பவர்களே! முன் வாருங்கள், பாவம் செய்பவர்களே! நிறுத்திக் கொள்ளுங்கள்!” என்று உரக்கச் சொல்வார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதீ, இப்னுமாஜா)

9) ரமலானின் துவக்கம் எப்போது?
பிறையைக் கண்டே நோன்பு நோறுங்கள், நோன்பை விடவும் செய்யுங்கள். மேகம்(பிறையை) மறைத்துவிட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

10) சந்தேகமான நாட்களில் நோன்பு நோற்கலாமா?
ரமளான் மாதத்திற்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்  சந்தேகமான நாட்களில் சுன்னத்தான நோன்பு நோற்கக்கூடாது.
“ரமளான் மாதத்தை விட ஒரு நாள் அல்லது இரண்டு நாளைக்கு முன்னால் உங்களில் யாரும்(சுன்னத்தான) நோன்பு நோற்கக்கூடாது. வழமையாக அந்த நாளில் நோன்பு நோற்பவர் நோற்றுக் கொள்ளட்டும்” என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். (புகாரி)

11) நோன்பை முறிக்கும் விஷயங்கள் யாவை?
நோன்பை முறிக்கும் விஷயங்கள்:
  1. உடலுறவில் ஈடுபடுதல்
  2. சாப்பிடுவது, குடிப்பது
  3. மாதவிடாய் ஏற்படுதல்
  4. பிரசவ கால இரத்தம் வெளியேறுதல்
  5. வேண்டுமென்றே வாந்தியெடுப்பது
  6. முத்தமிடுதல், சுய இன்பம் போன்றவற்றின் மூலம்  இந்திரியம் வெளிப்படுத்துவது
  7. நரம்பு வழியாக சத்தூசி போன்றவற்றை உட்கொள்ளுதல்
  8. இரத்ததானம் போன்றவற்றிக்காக இரத்தம் வெளியேற்றுதல்

12) நோன்பை முறிக்காத செயல்கள் யாவை?
நோன்பை முறிக்காத செயல்கள்:
  1. வேண்டுமென்று என்றில்லாமல் மறதியாக சாப்பிடுவது, குடிப்பது
  2. கணவின் மூலம் விந்துவெளிப்படுதல்
  3. இரத்தப் பரிசோதனைக்காக குறைவான இரத்தம் எடுத்தல்
  4. சுயவிருப்பமின்றி காயம், பல் பிடுங்குதல் மற்றும் மூக்கிலிருந்து இரத்தம் தானாக வெளியாகுதல் (மேற்கண்டவைகளை மறதியானால் அல்லாமல் வேண்டுமென்றே செய்தால் நோன்பு முறிந்துவிடும்.)
  5. குளித்தல், நீந்துதல்
  6. வெப்பத்தைத் தனித்துக்கொள்வதற்காக தண்ணீரை உடலில் தெளித்துக்கொள்வது
  7. பல் துலக்குதல் (விரும்பத்தக்கது)
  8. வாய் வழியாக உட்கொள்ளாத வகையில் வைத்தியம் செய்துகொள்வது (உ.ம். ஊசி போடுவது, கண், மூக்கு, காது ஆகியவற்றிக்கு சொட்டு மருந்து இடுதல்)
  9. வயிற்றுக்குள் சென்றுவிடாத வகையில் உணவை ருசிபார்ப்பது
  10. வாய்கொப்பளிப்பது
  11. வயிற்றினுள் தண்ணீர் சென்றுவிடாத வகையில் பக்குவமாக நாசிக்கு தண்ணீர் செலுத்துவது.
  12. வாசனைப் பொருட்களை உபயோகிப்பது, அவற்றை நுகர்வது
  13. நேரம் தெரியாது, சூரியன் மறைந்துவிட்டதாக எண்ணி, சூரியன் மறைவதற்கு முன்னரோ, அல்லது பஜ்ரு நேரம் வரவில்லை என்று எண்ணி, பஜ்ர் நேரம் வந்ததற்குப் பின்னரோ, சாப்பிட்டு விட்டால் நோன்பு முறியாது. எனினும் சரியான நேரத்தை தெரிந்து விட்டால், உடனே உணவை நிறுத்திக் கொள்ள வேண்டும். 
  14. கண்ணுக்கு சுருமா இடுதல்

13) நோன்பின் சுன்னத்துக்கள் யாவை?
1) ஸஹர் செய்தல் 2) விரைந்து நோன்பு துறத்தல் 3) துஆச் செய்தல்

14) ஸஹர் செய்வதன் சிறப்பு யாது?
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ‘ஸஹர் செய்யுங்கள்; ஏனெனில் ஸஹர் உணவில் பரக்கத் உள்ளது’ (புகாரி, முஸ்லிம்)
இரவின் கடைசி வரை ஸஹர் செய்வதை பிற்படுத்துவது சுன்னத்தாகும்.

15) நோன்பின் நிய்யத்தை எப்போது வைக்க வேண்டும்?
பர்ளான நோன்பு நோற்கும் விசயத்தில் பஜ்ர் உதயமாவதற்கு முன் நோன்பிற்குரிய நிய்யத்தை வைத்துக்கொள்வது கடமையாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ‘யார் நோன்பு நோற்க பஜ்ருக்கு முன்னால் நிய்யத்தை சேர்த்து வைக்கவில்லையோ அவரது நோன்பு கூடாது’ (அறிவிப்பவர் : ஹஃப்ஸா (ரலி), ஆதாரம் : அபூதாவுது, திர்மிதி, நஸயீ)

16) நோன்பின் நிய்யத்தை எவ்வாறு வைக்க வேண்டும்?
நிய்யத் (எண்ணம்) வைப்பது உள்ளத்தில் தான்! வாயால் அல்ல!

17) நோன்பாளிகள் தவிர்ந்துக்கொள்ள வேண்டியவைகள் யாவை?
யார் கெட்ட, பொய் பேச்சுக்களையும், அதை செயல்படுத்துவதையும் விட்டுவிடவில்லையோ அவன் நோன்பு நோற்று அவனது சாப்பாட்டையும் குடிப்பையும் விட்டு பசியில் இருப்பதனால் அல்லாஹ்வுக்கு எந்த தேவையும் இல்லை!’ (புகாரி)

18) நோன்பாளி நோன்பு திறக்கும் நேரத்தில் கேட்கும் துஆ ஏற்றுக்கொள்ளப்படுமா?
“நோன்பாளி நோன்பு திறக்கும் நேரத்தில் கேட்கும் துஆ மறுக்கப்படமாட்டாது” (இப்னுமாஜா)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ” மூன்று துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படும். நோன்பாளியின் துஆ, அநீதியிழைக்கப்பட்டவனின் துஆ, பயணியின் துஆ” (பைஹகி)

19) நோன்பு திறந்தவுடன் கூறவேண்டிய துஆ எது?
‘தஹபள் ளமவு வப்தல்லதில் உரூக் வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்’
பொருள்: தாகம் தனிந்தது. நரம்புகள் நனைந்தன. அல்லாஹ் நாடினால் கூலியும் கிடைத்துவிடும்.

20) எதைக்கொண்டு நோன்பு திறக்க வேண்டும்?
கனிந்த பேரித்தம் பழம் மூலம் நோன்பு திறப்பது சுன்னத் ஆகும். அது கிடைக்காவிடில் காய்ந்த பேரீத்தம் மூலமும் அதுவும் கிடைக்காவிடில் தண்ணீர் மூலமும் அதுவும் கிடைக்காவிடில் கிடைப்பதைக்கொண்டு நோன்பு திறப்பது சுன்னத்தாகும்.

21) ரமலான் இரவுத் தொழுகையின் (தராவீஹ்) சிறப்பு என்ன?
‘எவர் ரமலான் இரவில் ஈமானுடனும் நற்கூலி கிடைக்கும் என்ற எண்ணத்துடனும் நின்று வணங்குகிறாரோ அவரது முன் சென்ற பாவங்கள் அவருக்கு மன்னிக்கப்படுகின்றன’ என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.  (புகாரி, முஸ்லிம்)
thanks to suvanthendral