அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Thursday, July 11, 2013

வேறுநாட்டுக்குச் செல்லும் போது பிறைவித்தியாசம் ஏற்பட்டால்?

வேறுநாட்டுக்குச் செல்லும் போது பிறைவித்தியாசம் ஏற்பட்டால்? 

கேள்வி: சவுதியிலிருந்து ரமலான் மாதம் பாதியில் ஊருக்கு வருபவர் ஊரில் 30 வது நோன்பு அன்று அவருக்கு 31 வது நோன்பு. அவர் அன்று நோன்பை வைக்கலாமா அல்லது ரமலான் நோன்பு 30 மட்டும் தான் வைக்க முடியும் என்று கருத்து இருந்தால் அவர் கடைசி நோன்பைப் பிடிக்காமல் இருக்கலாமா ? 

பதில்: தலைப்பிறையைக் காண்பதில் ஒரு நாள் வித்தியாசம் ஏற்பட்டு சவுதியில் ரமலானை அடைந்து அதன் பிறகு மாத இடையில் ஊருக்கு வந்தவருக்கு இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது. பொதுவாக தொழுகை நோன்பு போன்ற அனைத்து காரியங்களையும் நாம் எந்த ஊரில் இருக்கிறோமோ அந்த ஊரின் நேரக்கணக்கின் அடிப்படையில் தான் அமைக்க வேண்டும். ஒரு ஊரில் இருந்து கொண்டு வேறொரு ஊரின் அல்லது நாட்டின் நேரக்கணக்கைப் பின்பற்ற முடியாது. இந்தியாவில் இருந்து கொண்டு சவதி நேரத்துக்கு தொழ முடியாது என்பது போன்று அங்குள்ள நேரக்கணக்கின் அடிப்படையில் இந்தியாவில் நோன்பு நோற்கவோ துறக்கவோ முடியாது. எனவே எந்த ஊரில் இருக்கிறோமோ அந்த ஊரின் நேரக் கணக்கின் அடிப்படையில் நம்முடைய தொழுகை நோன்பு போன்ற காரியங்களை அமைத்துக் கொள்ள வேண்டும். இதனடிப்படையில் சவுதியிலிருந்து இந்தியா வந்து சோ்ந்த பிறகு இந்தியாவின் நேரக்கணக்கைப் பின்பற்றி அவர் நோன்பு நோற்க வேண்டும். அவ்வாறு நடந்து கொள்ளும் போது முப்பத்து ஒன்றாவது நோன்பு வைக்க வேண்டிய நிலை வந்தால் என்ன செய்வது? மாதத்தைப் பற்றி இஸ்லாம் கூறும் போதனையை அறிந்து கொண்டால் இந்தப் பிரச்சனைக்கு தீர்வைக் காணலாம். ஒரு மாதம் என்பது இருபத்து ஒன்பது நாட்களாகவும் இருக்கும். முப்பது நாட்களாகவும் இருக்கும். முப்பத்து ஒரு நாட்கள் கிடையாது என்று இஸ்லாம் சொல்கிறது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மாதம் என்பது இருபத்து ஒன்பது நாட்களாகவும் இருக்கும். முப்பது நாட்களாகவும் இருக்கும். பிறையை நீங்கள் கண்டால் நோன்பு வையுங்கள். அதைப் பார்த்தே நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேகமூட்டம் குறுக்கிட்டால் எண்ணிக்கையை முழுமைப்படுத்துங்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : நஸாயீ (2109) ஒரு மாதத்திற்கு அதிக பட்சம் முப்பது நாட்கள் தான். முப்பத்து ஒரு நாட்கள் என்பது கிடையாது என்பதை இந்த நபிமொழியிலிருந்து அறிந்து கொள்ளலாம். உங்களில் யார் ரமலான் மாதத்தை அடைவாரோ அவர் நோன்பு நோற்கட்டும் என்ற வசனத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட நபர் சவுதியிலேயே ரமலான் மாதத்தை அடைந்து விட்டதால் அங்கு முதல் நோன்பு வைத்திருக்கிறார். இது சரியான வழிமுறையாகும். அதன் பிறகு பாதியில் அல்லது இறுதியில் ஊருக்கு திரும்பி வந்த போது ஊரில் உள்ளவர்களுக்கு முப்பதாவது நோன்பாகவும் இவருக்கு முப்பத்து ஒன்றாகவும் இருந்தால் அந்த நோன்பை அவர் நோற்கக் கூடாது. ஏனெனில் மாதம் என்பது அதிக பட்சம் முப்பது நாட்கள் தான் என்ற நபிமொழி இருப்பதால் அத்துடன் அவருக்கு ரமலான் மாதம் முடிந்து விட்டது. எனவே இவர் தனக்கு மாதம் பூர்த்தியான பிறகு நோன்பு நோற்காமல் காத்திருந்து ஊர் மக்கள் பெருநாள் கொண்டாடும் போது இவரும் சேர்ந்து பெருநாள் கொண்டாடுவார்.

thanks to onlinepj.com

No comments:

Post a Comment