அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Wednesday, March 7, 2012

விண்ணுலக நங்கைகளும் மண்ணுலக மங்கைகளும்


காதல் என்னும் மின்சார வலையில் வீழ்ந்து கிடக்கும் நம் இளைஞர்களுக்கு..!
மேனாட்டு நாகரீகம்(?) எனும் மோகம் மேகம்போல் வேகமாய் பரவி வரும் இக்காலத்தில் வாழ்ந்து வரும் இளைஞர்களே..! 'இளசு'களே..! வாழ்நாளைக் குறைக்கும் உயிர்கொல்லிதான் காதல் என்பது. அதனை ஒருபோதும் நீங்கள் மறந்துவிடலாகாது!
காதல் என்பது என்னவென்று புரிந்து கொள்ளாமல் தற்கால இளைஞர்களும், இளைஞிகளும், 'காதல்! காதல்!! என்றும் காதல் போயின் சாதல்! சாதல்!! என்றும் அலைகிறார்கள். உண்மைக் காதல் என்பது இலக்கிய ஏடுகளில் மட்டும் காணப்படுகின்றதே ஒழிய நடைமுறையில் அதைக் காண்பது அரிது.
தமக்கு ஏற்படும் மோகத்தையே காதல் என்று நினைத்து, இன்றைய 'இளசு'கள் மோசம் போகிறார்கள். காதல் என்பது யார் மீதாவது உண்டாகிவிடும். காதலை மனிதன் வாய்க்கால் வெட்டிச் செலுத்த முடியாது.
காமத்தில் இருந்து காதலைப் பிரிப்பது கடினம். இதனால்தான் காதல் மலிந்து மேலைநாடுகளில் விவாக விலக்கு பெருகி வருகின்றது. நேற்று மணம். இன்று விவாக விலக்கு என்பது அங்கு சர்வ சாதாரண நிகழ்ச்சி.
புதிதாகப் பழகும்போது மோகமே மேலோங்கி இருக்கும். குற்றம் குறைகள் கண்களுக்குப் புலப்படாது. திருமணமாகி ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள், சோகம் பத்து நாள் என்று கழிந்த பிறகு, நூறாவது நாளில் சோகம் தணிந்த பின் திரை விலகும். சண்டை சச்சரவுகள் பெருகும். இறுதியில் விவாக விலக்குகளில் போய் முடியும்.
லைலா - மஜ்னூன், ஷாஜஹான் - மும்தாஜ், சலீம் - அனார்கலி, நளினி - தமயந்தி, ரோமியோ - ஜூலியட், ஹிட்லர் - ஈவா, தேவதாஸ் - பார்வதி போன்றவர்களின் காதல் இலக்கியங்களை நம்பி கனவுலகில் 'உலா' வருகிறார்கள்.
நாவல்கள் - திரைப்படக் காதல் கதைகளைப் பார்த்து, அதன் 'ஜிகினா' கனவுகளில் மெய் மறந்து திரிகிறார்கள்.
கனவுத் தொழிற்சாலைகளில் தயாராகி வரும் காதல் கதைகளை எல்லாம் உண்மையென நம்பி, மின்சார கனவு கண்டு மோசம் போகிறார்கள்.
காதல் உணர்வு வந்து உள்ளத்தில் குடிகொண்ட உடன், தூக்கம் என்பது கண்களுக்கு பரம விரோதியாகி விடுகிறது. அறிவு மழுங்கிவிடுகிறது. புலன்கள் யாவும் பேதலித்து விடுகிறது. அமைதியில் தொடங்கிய காதல் நாளை உங்களை பைத்தியக்காரனாக மாற்றிவிடும். மாதுவை மறக்க, மதுவைக் குடிக்கச் சொல்லும். போதைப் பொருட்களை உட்கொள்ள வைக்கும். இறுதியில் சிந்தனையைச் சிதறடித்துவிடும்.
இப்படிப்பட்ட மோசமான விளைவுகளை மனித சமுதாயம் எதிர்கொள்ள நேரிடும். இவ்வித கசப்பான விளைவுகளிலிருந்து மனிதன் தன்னை முன் எச்சரிக்கையுடன் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
அன்று முதல் இன்று வரை காதல் என்னும் மாயையிலிருந்து எவரும் தப்ப முடியாது. அப்படி ஒருவன் தப்ப முடியுமானால் அது தெய்வச் செயல்தான். இதற்கு நபி யூசுப்(அலை) அவர்கள் உங்களுக்கு ஓர் முன்மாதிரியாவார். 
இதோ திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:
'
ஆனால் அவளோ அவரைத் திடமாக விரும்பினாள், அவரும் தம் இறைவனின் ஆதாரத்தைக் கண்டிராவிட்டால் அவள் மீது விருப்பம் கொண்டே இருப்பார், இவ்வாறு நாம் அவரை விட்டுத் தீமையையும் மானக்கேடான செயல்களையும் திருப்பிவிட்டோம் - ஏனெனில் நிச்சயமாக அவர் தம் தூய்மையான அடியார்களில் ஒருவராக இருந்தார்.' (அத்தியாயம் 12 ஸூரத்து யூஸுஃப் - 24வது வசனம்).

'
அன்றியும், நான் என் மனதைப் பாவத்தை விட்டும் பரிசுத்தமாக்கி விட்டதாகவும் (கூற) இல்லை: ஏனெனில் மன இச்சையானது தீமையைத் தூண்டக்கூடியதாக இருக்கிறது - என் இறைவன் அருள் புரிந்தாலன்றி, நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவனாகவும், அருளாளனாகவும் இருக்கின்றான்' (என்றும் கூறினார்).' (அத்தியாயம் 12 ஸூரத்து யூஸுஃப் - 53வது வசனம்).


'..
இவர்களின் சதியை விட்டு நீ என்னைக் காப்பாற்றவில்லையானால், நான் இவர்கள் பால் சாய்ந்து (பாவத்தால்) அறிவில்லாதவர்களில் ஒருவனாகி விடுவேன்' என்று (பிரார்த்தித்தவராக) கூறினார்.' (அத்தியாயம் 12 ஸூரத்து யூஸுஃப் - 33வது வசனத்தின் ஒரு பகுதி).

'
நிச்சயமாக இது (பெண்களாகிய) உங்கள் சதியேயாகும் - நிச்சயமாக உங்களுடைய(பெண்களுடைய) சதி மகத்தானதே!' (அத்தியாயம் 12 ஸூரத்து யூஸுஃப் 28வது வசனத்தின் ஒரு பகுதி). 


அருள்மறை குர்ஆனின் 12வது அத்தியாயம் யூஸுஃப் நபியின் வரலாறு ஓர் காதல் இலக்கியம். அந்த அத்தியாயம் தரும் படிப்பினையை நாம் மறந்துவிடலாகாது. காதலில் மதிமயங்காமல் சிறை வாழ்வை அனுபவித்தவர்தாம் நபி யூஸுஃப் (அலை) அவர்கள். அவர் சற்று பிசகி இடறி இருந்தால் கூட தமது அடிமை வாழ்வில் இருந்து விடுபட்டு உல்லாச மாளிகையில் உலா வந்திருப்பார். ஆயினும் இறைவனுக்கு அஞ்சி ஏழு ஆண்டுகள் சிறை வாழ்க்கையினை பெற்றார். 

மண் - பெண் - பொன் இவை இவ்வுலகில் ஷைத்தானின் பயங்கர ஆயுதங்கள்!.

காதல் இச்சையை அதன் போக்கில் விட்டுவிட்டால் கடிவாளத்தினால் அடக்க முடியாத குதிரை தன் விருப்பப்படி மேடு பள்ளங்களில் பாய்ந்து சென்று இறுதியில் எப்படி தன் மேல் இருப்பவனை படு பாதாளத்தில் தள்ளி விடுமோ, அவ்வாறே அடக்கப்படாத மனோ இச்சை உடையவனைப் பெருந்துன்பம் எனும் பள்ளத்தில் அது வீழ்த்திவிடும்.

மனக் குதிரையை மடக்குவதே ஆண்மையாகும். விஷப்பூண்டு நிரம்பிய காதல் என்னும் செடியை மனதின் மேல் படரவிடாதீர்கள். அதன் அருகில் கூட மனதை அலைபாய விடாதீர்கள். இல்லையெனில் அது எதிர்பாராத பல விளைவுகளை நிகழ்த்திக் காட்டிவிடும்.

பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சியின் வாயிலாக அடுக்கடுக்கான கற்பழிப்பு சம்பவங்கள் பற்றியும், அரசியல்வாதிகள் முதல் சாமியார்கள் வரை அரங்கேற்றும் மானக்கேடான சம்பவங்கள் பற்றியும் படித்திருப்பீர்கள். செய்தியாக கேட்டிருப்பீர்கள். இன்று காவல் நிலையங்கள் கூட கற்பழிப்புக் கூடங்களாக மாறிவருகின்றன. இது ஏன்?

காமத்திற்கு வடிகால் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு மத்தியில் நவ நாகரீகம் என்கிற போர்வையில் - பெண்கள் - தங்களின் கவர்ச்சியைக் காட்ட உடல் அழகைக் கூட்டி, வீதியில் உலா வருவதால்தானே!

கரிய மேகங்கைப் பழிக்கும் கார்கூந்தல் - மூன்றாம் பிறை நெற்றி - வில் போன்ற புருவம் - மதமதப்பான பருவம் - கண்டோரைக் கவிழ்த்திடும் உருவம் - கெண்டை விழிகள் - ஆப்பிள் கன்னங்கள் - அப்பப்பா.. இப்படியெல்லாம் கவிஞர்கள், எழுத்தாளர்கள் பெண்ணைக் கற்பனை செய்கிறார்கள். அதில் நீங்கள் மெய் மறந்து, உணர்வு இழந்து மோசம் போகிறீர்கள். நாசம் ஆகிறீர்கள்.

பெண்ணோ அல்லது ஆணோ அவர்களின் ஒரு புற கவர்ச்சி மாத்திரமே உங்களை அலைக்கழிக்க வைக்கிறது. இதோ, அவர்களின் மறுபுறத்தையும் பாருங்கள்..!

ஆண் அல்லது பெண்..!

அவர்கள் உலகப் பேரழகனாக அல்லது உலகப் பேரழகியாக இருந்தாலும் கூட ஒரு வேளை பல் தேய்க்காவிட்டால் அவர்கள் அருகில் நெருங்க முடியாது. வாய்நாற்றம் தாங்க முடியாது. தலைவாரி அலங்கரிக்கவில்லையெனில் பார்வைக்குப் பைத்தியக்காரர்கள் போல் தோற்றமளிப்பார்கள். தினசரி குளிக்காவிட்டால் உடலில் நாற்றம் எடுக்கத் துவங்கிவிடும். வயதாகி விட்டால் கிழவனாகவோ - கிழவியாகவோ ஆகி பிறகு எதற்கும் இயலாதவர்களாக விடுவார்கள். மலஜலம், மூத்திரம், வியர்வை - சளி, இருமல், பெண்களாக இருந்தால் அவர்களுக்கே உரிய கூடுதல் உபாதையான மாதவிடாய் என உடலில் இருந்து வெளியாகும் கழிவுப்பொருட்கள் ஏராளம். தவிர மனிதர்களுக்கே உரித்தான துக்கம், சஞ்சலம், நோய், மூப்பு, வேதனை என மனிதர்களை வாட்டி எடுக்கும் தொல்லைகள் தாராளம். ஆண், பெண் ஆகிய இவரால் அவருக்கோ அல்லது அவரால் அவருக்கோ தொந்தரவு ஏற்பட்டால் நன்றி மறக்கும் தன்மை ஏற்படும். இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு. இருவரும் ஒருவர் மேல் ஒருவர் கொண்டிருக்கும் காதல் மறக்கும். 

காதல் வயப்படாமல் மனைவியை மட்டும் அல்லது கணவனை மட்டும் காதலிக்கக் கூடியவர்களுக்கு மறுமையில் கிடைப்பதோ 'ஹூருல்ஈன்' என்னும் அழகிய கண்களையுடைய சரியான இணைகள் (ஜோடிகள்). அத்தகைய இணைகளை வர்ணிக்க வார்த்தைகள் ஏது?.

இதோ அருள்மறை குர்ஆன் இவ்வாறு இயம்புகிறது.
'
அவற்றில் (சுவர்க்கத்தில்) அடக்கமான பார்வையுடைய (அமரக்) கன்னியர் இருக்கின்றனர். அவர்களை இவர்களுக்கு எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை. அவர்கள் வெண் முத்தைப் போன்றும், பவளத்தைப் போன்றும் இருப்பார்கள்.' (அத்தியாயம் 55 ஸுரத்துர் ரஹ்மான் - 56 மற்றும் 58வது வசனங்கள்).

'
ஹூர் (என்னும் அவ்விணைகள் அழகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர்.' (அத்தியாயம் 55 ஸுரத்துர் ரஹ்மான் - 72வது வசனம்).

'(
அவர்கள்) பசுமையான இரத்தினக் கம்பளங்களின் மீதும், அழகு மிக்க விரிப்புக்கள் மீதும் சாய்ந்தவர்களாக இருப்பார்கள்'. (அத்தியாயம் 55 ஸுரத்துர் ரஹ்மான் - 76வது வசனம்).

'
நிச்சயமாக (ஹூருல் ஈன் என்னும் அவ்விணைகளை) புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி, அவ்விணைகளைக் கன்னியராகவும், பாசமுடையோராகவும், சம வயதினராகவும், வலப் புற்த்தோருக்காக (ஆக்கி வைத்துள்ளோம்).' (அத்தியாயம் 56 ஸூரத்துல் வாகியா - ன் 35, 36, 37 மற்றும் 38வது வசனங்கள்).


மேலும் அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சுவனத்துப் பெண்களுடைய கால்களின் வெண்மை எழுபது ஆடைகளுக்கு அப்பால் இருந்தும் காணப்படக்கூடியதாக இருக்கும். (எலும்புக்குள் இருக்கும்) மஜ்ஜையும் காணமுடியும். அவர்கள் பவளமும், முத்துமாக இருப்பார்கள். (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி) நூல்கள்: திர்மிதி, இப்னு ஹிப்பான்).

நபி(ஸல்): 'சுவனத்தில் இறைவிசுவாசிகளுக்கு எத்தனையோ பெண்களுடன் உறவு கொள்ளும் ஆற்றல் வழங்கப்படும்!'

நபித்தோழர்கள்: 'இறைத்தூதரே! இது இயலுமா?'

நபி(ஸல்): '(அன்று) நூறு பேர்களின் பலம் வழங்கப்படும்!' (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), ஆதார நூல்கள்: திர்மிதீ, இப்னுஹிப்பான்).


'
சுவனத்துப் பெண்களில் ஒரு பெண் இப்பூமியில் உள்ளவர்களுக்கு காட்சி அளித்தால், சுவனத்துக்கும் பூமிக்கும் இடைப்பட்ட பகுதிகளை பிரகாசிக்கச் செய்வாள். அந்த இரண்டிற்கும் இடையே நறுமணம் வீசச் செய்வாள். அவள் தலையில் உள்ள முக்காடு இவ்வுலகையும், அதில் உள்ளவற்றையும் விட மேலானதாகும்' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்கள்: திர்மிதி, அஹ்மத்). 

இளைய சமுதாயமே!

இந்த உலகமும் அதில் உள்ள சுகபோக பாக்கியங்கள் யாவும் நீர்குமிழிபோல் நிலையற்றவை. துக்கம் உண்டாக்குபவை என அறிந்த பின்பும் அதில் மயங்கிக் கிடக்கலாமா?

உங்கள் மனதை புலன்களில் ஓட விடாமல் தடுத்து, அதை அல்லும், பகலும் மாறி மாறி வரும் அற்ப இன்பத்தை இச்சித்து, அலைபாய விடாதீர்கள். மாய உலகை நம்பி மதி மயங்காதீர்கள்.

மண்ணுலக மங்கையை விட விண்ணுலக நங்கை உயர்ந்தவள். ஒப்பற்றவள்;. காதலாவது, கத்தரிக்காயாவது? இறைவன் விலக்கியவற்றை விட்டு விலகி, அவன் அருளைப்பெறும் மார்க்கத்தைத் தேடி நம் வாழ்வை சீர் படுத்திக் கொள்வோமாக!.
--கட்டுரை: மதுரை அப்துல்லாஹ் மன்பயீ ..

No comments:

Post a Comment