அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Thursday, October 18, 2012

துபை சங்கத்தினர் புறக்கணித்தார்களா?


நமதூரில் சமீபத்தில் நடந்த இரண்டு மூன்று ஊர்கூட்டத்தில் நீடூர்-நெய்வாசல் துபாய் சங்கத்தைப் பற்றி தவறான தகவல்களை, குற்றச்சாட்டுக்களை சொல்கின்றார்கள். என்னவென்றால் நமதூர் பெரிய பள்ளிவாசல் கட்டுமானப்பணி தொடர்பாக ஊரிலிருந்து சகோதரர்கள் வசூலுக்கு வந்த போது சங்கத்தினர் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்கின்றனர். அதற்கு என்ன காரணம்? என்ன நடந்தது? என்பதை விளக்குகின்றோம்.

பொதுவாக ஊரிலிருந்து யாரும் நல்ல காரியத்திற்கு வசூலுக்கு வரும் போது சங்கத்திற்கும் தெரிவிப்பார்கள், கடிதம் எழுதுவார்கள். அப்படி அதிரைப்பள்ளி வசூலுக்கு மர்ஹூம் M.M.S. அபுல்ஹசன் அவர்களும், தேங்காய் மண்டி முஸ்தபா அவர்களும் துபைக்கு வந்த போது சங்கத்தினர் சார்பில் ஹோட்டலில் வரவேற்பு கூட்டம் நடத்தி ஜமாத்தினரை சந்திக்க ஏற்பாடு செய்தோம். சங்கத்தின் சார்பாக நன்கொடை வழங்கினோம்.

அதன்  பிறகு மயிலாடுதுறை ஆசாத் மெட்ரிக் ஸ்கூல் கட்டுமான பணிக்கு ஊரிலிருந்து சகோதரர்கள் வந்த போதும் துபை அட்லாஸ் ஓட்டலில் கூட்டம் நடத்தி நன்கொடை வழங்கப்பட்டது. அதே போல் நமதூர் மதரஸா பள்ளி வசூலுக்கு சகோதரர்கள் வந்த போது மதரஸா நிர்வாகத்திலிருந்து முன்கூட்டியே மர்ஹூம் S.E.A. முஹம்மது சையத் அவர்களும், H.T. அன்சாரி அவர்களும் கடிதம் எழுதியிருந்தார்கள். இங்கு வசூலுக்கு வந்த சகோதரர்கள் சொல்லித் தான் சங்கத்திற்கு கடிதம் எழுதியிருந்தார்கள். அப்போதும் ஈமான் சங்கத்தில் நமதூர் ஜமாத்தினரை சந்திக்க ஏற்பாடு செய்து, வசூல் செய்தும் கொடுத்தோம். ஜின்னா தெரு பள்ளிவாசல் கட்டுமானப் பணிக்கு வசூலுக்கு யாரும் வரவில்லை. அப்போதைய முத்தவல்லி மர்ஹூம் M.A.P. ரஹமத்துல்லாஹ் அவர்கள் வசூல் செய்து அனுப்பும்படி கூறியிருந்தார்கள். அதற்கும் வசூல் செய்து அனுப்பியிருந்தோம்.

இப்படியிருக்கும் போது பெரிய பள்ளி வசூலுக்கு வரும்போது சங்கத்திற்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. மாறாக இங்கு ஊரிலிருந்து வந்திருந்த சகோதரர்கள் சுன்னத்துல் ஜமாஅத் சங்கம் என்று பிரித்து வைத்தார்கள். இருந்தும் சங்கத்தை சேர்ந்தவர்கள் யாரையும் நன்கொடை கொடுக்க வேண்டாம் என்றோ, அவர்களை சந்திக்க வேண்டாம் என்றோ சொல்லவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவர்கள் ஆரம்பித்த சங்கத்திற்கு நீடூர்-நெய்வாசல் அசோசியேசனில் பொறுப்பில் இருந்த சில சகோதரர்களை அங்கும் பொறுப்பாளராக கட்டாயப்படுத்தி நியமித்தார்கள். அந்த ஒரு கூட்டத்தோடு அந்த சங்கமும் செயல்படவில்லை.

இங்கு சங்கத்தினரை அணுகாமல் சங்கத்தினர் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று கூறுவது தவறு. பழையதையெல்லாம் மறந்து துபையிலும், ஊரிலும் புதிய நிர்வாகிகள் வந்துள்ளார்கள். இதுவரை தவறான புரிதல்களால் ஒரு இடைவெளி ஏற்பட்டுவிட்டது. இனியேனும் பரஸ்பரம் புரிதலோடு நல்ல காரியங்களை புதிய நிர்வாகிகளோடு கலந்து செய்யலாம் என்று துபை சங்கத்தினர் ஊரில் நிர்வாகிகளை அணுகிய போது பிறகு பார்க்கலாம் என்று தவிர்த்துவிட்டனர். அதன் பிறகு ஃபித்ரா எங்கு வழங்குவது? என்று இங்கு சங்கத்தில் விவாதித்த போது இரண்டு மூன்று இடங்கள் பரிசீலனை செய்து அதன் பிறகு ஊர் செல்லும் H. முஹம்மது அலியின் வசதிப்படி செய்ய சொல்லி சங்கத்தினர் கருத்து தெரிவித்திருந்தனர். அதன்படி அவரும் ஊர் நிர்வாகிகளை அணுகிய போது பார்க்கலாம் என்றவர்கள் பதில் சொல்லவில்லை. அதன் பிறகு பொது இடத்தில் கொடுப்பது சிறந்தது என்று ஜின்னா தெரு பள்ளியில் கொடுக்க ஏற்பாடு செய்திருந்தனர். இதை அறிந்த ஊர் நிர்வாகிகள் பள்ளியை பூட்டினார்கள். அதன் பிறகு நசீர் அலியின் வீட்டில் வைத்து ஃபித்ரா விநியோகம் சங்கத்தினர் சார்பாக செய்யப்பட்டது. இதற்கு முன்பும் ஜின்னா தெரு பள்ளியில் சங்கத்தினர் சார்பாக ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. 

ஊர் கூட்டத்தில் சகோதரர் ஒருவர் "நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. பேனர் வைக்கக் கூடாது, போட்டோ கூடாது என்று தான் சொன்னோம்" என்று கூறியுள்ளார்.அப்படியெல்லாம் முன்கூட்டியே எதுவும் சொல்லவில்லை.

இனிவரும் காலங்களிலாவது நிர்வாகிகளின் அணுகுமுறை மாற வேண்டும். பரஸ்பரம் தவறான தகவல்கள் சொல்லபடுகின்றது. அதன் காரணமாக தவறான புரிதல்கள் உள்ளது. எதுவாக இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களிடம் கலந்து பேச வேண்டும். ஏன் பேனர் வைக்கின்றார்கள் என்றால் பேனர் வைக்காமல் ஃபித்ரா வழங்குபவர் தங்களது வீட்டில் வைத்து கொடுக்கும் போது அவர் சொந்த செலவில் கொடுப்பது போல ஒரு தோற்றம் வருவதாக சங்க உறுப்பினர்கள் கருதுகிறார்கள். அதனால் தான் பொது இடத்தில் வைத்துக் கொடுக்க ஆசைப்படுகிறார்கள்.

அங்கு (துபையில்) எல்லோரையும் ஒன்றிணையுங்கள் என்றும் பிறகு பார்க்கலாம் என்றும் அறிவுறுத்தப்படுகின்றது. இங்கு பிளவு பட்டு இருந்தால் தானே ஒன்றிணைக்க முடியும்? இங்கு அனைவும் ஒற்றுமையுடன் தான் இருக்கின்றோம். ஊர் நிர்வாகிகள் நமதூருக்கு நல்ல காரியங்களை செய்ய அறிவுறுத்தவும், ஆலோசனை செய்யவும் வேண்டும். மாறாக, அங்கு தவ்ஹீத்வாதிகள் சங்கத்தில் இருந்தார்கள், அதனால் அது நஜாத் சங்கம் என்று குற்றம் சுமத்த வேண்டாம். இங்கு சங்கத்தில் தமுமுக, தவ்ஹீத் ஜமாஅத், முஸ்லீம் லீக் மற்றும் பல அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் இருக்கின்றார்கள்.சங்கம் என்று வந்துவிட்டால் ஊரில் எங்களால் முடிந்த நல்ல காரியம் செய்யத் தான் கூடுகிறோம். கட்சிக்கோ, எந்த அமைப்புகளுக்கோ நன்கொடை வழங்குவதில்லை.

ஆகையால் இனிமேலும் துபை சங்கத்தை தவறாக நினைக்க வேண்டாம். இனிவரும் காலங்களில் இணைந்து ஊரின் நலனுக்கு பாடுபடுவோம். ஆமின்!


No comments:

Post a Comment