இஸ்லாத்தின் தனிச் சிறப்புகளில் முதன்மையானது, அதன் இறையியல் கொள்கைதான். உலகமே இறையியல் கொள்கையில் குழப்பத்தில் ஆழ்ந்திருந்த வேளையில், இஸ்லாம்தான் தெளிவான இலக்கணம் வகுத்தது; திருக்குர்ஆன் அதற்கு வழி வகுத்தது.
இருக்கின்றான் இறைவன்; ஒருவனே அவன். இதுதான் இஸ்லாத்தின் இறையியல் அடிப்படை. இதன் மூலம், கடவுள் இல்லை என்ற இறைமறுப்பையும் (குஃப்ர்) பல தெய்வங்கள் உள்ளன என்ற இணைவைப்பையும் (ஷிர்க்) இஸ்லாம் ஒரே நேரத்தில் நிராகரித்தது.
(நபியே!) கூறுவீராக: அல்லாஹ் (இறைவன்) ஒருவன்; அவன் எந்தத் தேவையுமற்றவன்; அவன் (யாரையும்) பெற்றெடுக்கவில்லை; அவன் (யாராலும்) பெற்றெடுக்கப்படவுமில்லை; அவனுக்கு நிகர் யாருமில்லை. (112)
இந்த அத்தியாயம், முழு குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதிக்குச் சமமாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் (புகாரீ). அதாவது குர்ஆனின் கருத்துகளை மூன்று பாகங்களாகப் பிரித்தால், அதில் ஒரு பாகம், ஓரிறைக் கொள்கையாகவே (தவ்ஹீத்) இருக்கும். மற்ற இரு பாகங்கள் செய்திகள், விதிகள் ஆகியவையாகும்.
உலகமே வரையறுக்கப்பட்ட ஒரு விதியின்கீழ் இயங்கிவருகிறது. அவ்விதியை உருவாக்கியவனே இறைவன். இறைவன் ஒன்றுக்கு மேற்பட்டவர்களாக இருந்தால், உலகம் சீர்குலைந்திருக்கும் (21:22). ஒவ்வொருவனும் தன் படைப்புகளைத் தனியாகப் பிரித்து தனிக்கட்சி ஆரம்பித்திருப்பான். (23:91)
இறைவனின் தனித்தன்மைகள்:
எகிப்து சர்வாதிகாரி ஃபிர்அவ்ன் (ஃபாரோ) தன்னையே கடவுள் என்று பிரகடனப்படுத்திக்கொண்டவன். இறைத்தூதர்கள் மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் ஹாரூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களும், "நீ கடவுள் அல்ல; உன்னையும் எங்களையும் படைத்த இறைவன் ஒருவன் இருக்கின்றான்" என்றனர். நீங்கள் சொல்லும் அந்த இறைவன் யார் என்று சர்வாதிகாரி திருப்பிக் கேட்டான்.
அதற்கு மூசா, "ஒவ்வொரு பொருளுக்கும் அதனதன் இயற்கையை வழங்கி, பின்னர் வழிகாட்டியவனே எங்கள் இறைவன்" என்று கூறினார். (20:50)
அவன்தான் வானங்களையும் பூமியையும் படைத்தான்; இருள்களையும் ஒளியையும் படைத்தான். (6:1)
அவனே என்னைப் படைத்தான்; எனக்கு நல்வழி காட்டுகிறான். அவனே எனக்கு உணவளிக்கிறான்; நீர் புகட்டுகிறான்; நான் நோயுறும்போது அவனே எனக்குக் குணமளிக்கிறான்; அவனே என்னை மரணிக்கச்செய்கிறான்; பின்னர் எனக்கு உயிர் கொடுப்பான் (என்று இப்ராஹீம் கூறினார்). (26:78-81)
என்னை அழவைப்பவன், சிரிக்க வைப்பவன், வாழவைப்பவன், எனக்குக் குழந்தை கொடுப்பவன், கல்வி கொடுப்பவன், செல்வம் கொடுப்பவன், ஏற்றமும் இறக்கமும் தருபவன், என்னைத் தடுக்கிவிழச் செய்பவன், கை கொடுத்துத் தூக்கிவிடுபவன், குற்றங்களைத் தடுப்பவன், குற்றம் செய்துவிட்டால் மன்னிப்பவன், நன்மை செய்யவைப்பவன், அதற்குக் கூலியும் கொடுப்பவன், என் வேண்டுதலை ஏற்பவன் -எல்லாம் அவனே; வேறு யாருமில்லை.
மனிதனின் பிறப்பு இறப்புக்கும் ஏற்றத்தாழ்வுக்கும் வெளிக்காரணிகள் இருக்கலாம். அவையே காரணங்கள் அல்ல; அடிப்படைக் காரணம் இறைவனே. அந்த வெளிக்காரணங்களை உருவாக்குபவனும் அவனே. அவனின்றி அணுவும் அசையாது. அவனே ஏகன்; அவனே அல்லாஹ். இதுதான் இஸ்லாமியக் கொள்கையான அகீதா; இவ்வாறே நம்பிக்கை (ஈமான்) கொள்ள வேண்டும்.
இணை கிடையாது:
அல்லாஹ்வுக்கு இணை கிடையாது; அவனுடைய தனித்தன்மைகளில் யாரும் கூட்டாகவும் முடியாது. வானவர்களோ ஜின்களோ மனிதர்களோ விலங்குகளோ யாராக இருந்தாலும் அனைவரும் அல்லாஹ்வால் படைக்கப்பட்டவர்களே; அவனுடைய அடிமைகளே. அவர்களுக்கெனத் தன்னாற்றல் எதுவும் கிடையாது; எல்லா ஆற்றல்களும் அல்லாஹ் அருளிய கொடைகளே.
வானவர்களை இறைவனின் புதல்வியர் (தேவதைகள்) என்றனர், அறியாமைக் கால அரபியர். இந்த வாதத்தை வன்மையாக மறுக்கின்றான் அல்லாஹ்:
அளவற்ற அருளாளன் குழந்தையை ஏற்படுத்திக்கொண்டான் என்று அவர்கள் கூறுகின்றனர். அவனோ தூயவன். (உண்மையில்) அந்த வானவர்கள் மரியாதைக்குரிய அடியார்கள் ஆவர். அவனை முந்திக்கொண்டு பேசமாட்டார்கள்; அவனது ஆணைக்கேற்பவே அவர்கள் செயல்படுவார்கள். (21:26,27)
அவ்வாறே மனிதர்களில் சிலர் ஜின்களைத் தெய்வங்களாக, அல்லது தெய்வத்திற்கு இணைகளாகப் போற்றி வழிபடுகின்றனர். இதையும் அல்லாஹ் மறுக்கின்றான்.
அவர்கள் ‘ஜின்’களை அல்லாஹ்வுக்கு இணைகளாக ஆக்குகின்றனர். (ஆனால்,) அந்த ஜின்களையும் அவன்தான் படைத்தான். (6:100)
சிலர் இறைத்தூதர்களையே இறைவன் என்றனர்; அல்லது இறைவனின் அவதாரம் என்றனர். இதையும் அல்லாஹ் மறுக்கின்றான். இறைத்தூதர்கள் மனிதர்களே என்பதை இறைவன் அடித்துச்சொல்கின்றான்.
(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களை உணவு உண்போராகவும் கடை வீதிகளில் நடமாடுவோராகவுமே அனுப்பினோம். (25:20)
இறைவன் மனிதனல்ல; மனிதர்களான இறைத்தூதர்கள் இறைவனாக இருக்க முடியாது. இவ்வாறு மனிதர்கள், ஜின்கள், வானவர்கள் ஆகியோரைத் தெய்வங்களாகக் கருதி மக்கள் வழிபடுகின்றனர். விலங்குகளைக்கூட சிலைகளாக வடித்து வழிபாடு செய்கின்றனர். சில விலங்குகள் கடவுளுக்கு உதவி செய்தனவாம்! அதனால் அவற்றையும் கண்ணியப்படுத்தி பூசிக்கின்றனர்.
அபிசீனிய நாட்டிற்குச் சென்றிந்த உம்மு சலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், அங்கு ‘மரியா’ எனும் கிறித்தவ ஆலயத்தைக் கண்டார்கள். அதில் சில உருவப்படங்களையும் கண்டார்கள். ஊர் திரும்பியபின் அது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் உம்மு சலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தெரிவித்தார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்: அந்த மக்கள், தம்மில் ஒரு நல்ல மனிதர் வாழ்ந்து இறந்துவிட்டால், அவரது சமாதியின் மீது வழிபாட்டுத் தலம் ஒன்றை எழுப்பிவிடுவார்கள்; அதில் அந்த உருவங்களை வரைந்துவிடுவார்கள். இத்தகையோர்தான் அல்லாஹ்விடம் மிகவும் மோசமானவர்கள். (புகாரீ)
இப்படித்தான், சிலை வழிபாடு ஆரம்பமானது. பெரியவர்கள்மேல் கொண்ட மரியாதை, பக்தியாக மாறி அவர்களையே கடவுளாக மாற்றிய கொடுமைதான். சிலை வழிபாட்டிற்கு வழி கோலியது.
முஸ்லிம் மகான்கள்:
ஹிஜ்ரீ 5ஆம் நூற்றாண்டு வாக்கில் இஸ்லாமியப் பரப்புரையாளர்கள் தீவிரமான பிரசாரங்களை மேற்கொண்டார்கள். இந்தப் பிரசாரத்தின் பலனால் முஸ்லிம்களில் வழிதவறிச் சென்ற குற்றவாளிகள் பலர் திருந்தினர்; முஸ்லிமல்லாதோர் இலட்சக்கணக்கில் இஸ்லாத்தைத் தழுவினர்.
இந்தச் சீர்திருத்தவாதிகளிடம் இறையச்சம், தூய்மையான எண்ணம், கூடுதலான வழிபாடு, உலக ஆசையின்மை, சுன்னத்தான வாழ்க்கை, உயர்ந்த குணம், தியாக உணர்வு என எல்லா சிறப்பம்சங்களும் நிறைந்திருந்தன. அவர்களின் சொல்லும் செயலும் ஒன்றாயிருந்தன; அகமும் புறமும் அப்பழுக்கற்றவையாக இருந்தன.
இதனால் அவர்கள் எளிமையாகப் பேசினாலும் சொல்லில் வீரியம் இருந்தது; உள்ளத்திலிருந்து எழுந்த அவர்களின் மொழி உள்ளங்களைத் தொட்டது; குற்றவாளிகளைத் திருத்தியது; எதிரிகளை நண்பர்களாக்கியது. பிரதிபலன் எதிர்பாராத அவர்களின் சேவையும் இக்லாஸும்தான் இந்த வெற்றிக்குக் காரணம்.
இராக்கில் ஜீலான் நகரில் வாழ்ந்த ஷைக் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் (இறப்பு: ஹிஜ்ரீ 561; கி.பி. 1166) தொண்ணூறு வயதுவரை வாழ்ந்தார்கள். மிகப்பெரிய மார்க்க அறிஞரும் ஓரிறைக் கொள்கையின் பரப்புரையாளருமான அன்னாரின் கரத்தில் பல மில்லியன் மக்கள் நல்வழி அடைந்தனர்.
இந்தியாவில் அஜ்மீர் நகரில் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஷைக் காஜா முயீனுத்தீன் சிஸ்தி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் (மறைவு: கி.பி. 1236) தம் கடுமையான உழைப்பால் இலட்சக்கணக்கானோரை இஸ்லாத்தில் இணைத்தார்கள். அவ்வாறே தமிழ்நாட்டில் நாகூர் நகரில் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஷைக் ஷாஹ் அப்துல் ஹமீத் அல்காஹிரீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் மாபெரும் சீர்திருத்தவாதியாக விளங்கினார்கள்.
ஆனால், இந்த நல்லடியார்கள் மறைந்தபின், அவர்கள்மீது கொண்ட மரியாதையால் அவர்களின் அடக்கத் தலங்களில் பல்வேறு அனாசாரங்களை மக்கள் அரங்கேற்றிவருகின்றனர். ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த விழாக்களில் இஸ்லாத்திற்கு விரோதமான சடங்குகள் விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றன.
சொல்லப்போனால், அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டிய சஜ்தாவை அந்த மகான்களுக்குச் செய்கின்றனர்; கஅபாவில் மட்டுமே செய்ய வேண்டிய தவாஃபை அடக்கத் தலங்களில் செய்கின்றனர். சிலர் மகான்களை, அவர்களின் தகுதிக்குமேல் உயர்த்தி அவர்களிடமே பிரார்த்திக்கின்றனர்; அவர்களையே சிலர் வழிபடவும் செய்கின்றனர்.
பறிபோகும் அகீதா:
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரர் மரியாதைக்குரிய ஹுசைன் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் நினைவு நாளன்று தீமிதி விழா(?) இன்று நடக்கிறது. அதை ஒரு தெய்வீகத் தன்மையோடுதான் மக்கள் பார்க்கின்றனர். இதையும் நியாயப்படுத்தக்கூடிய அறிஞர்கள் இருக்கவே செய்கின்றனர்.
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள். (4:36)
அல்லாஹ்வுக்கே சஜ்தா செய்யுங்கள்; அவனையே வழிபடுங்கள். (53:62)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் இன்னொரு மனிதருக்கு சஜ்தா செய்வது தகாது. அவ்வாறு தகும் என்றிருந்தால், கணவனுக்கு சஜ்தா செய்யுமாறு மனைவிக்கு நான் கட்டளையிட்டிருப்பேன்; அவனுக்கு அவள் செய்ய வேண்டிய கடமை அந்த அளவுக்குப் பெரியதாகும். (முஸ்னது அஹ்மத்)
அது மட்டுமன்றி, "நம் மார்க்கத்தில் (முன்மாதிரி) இல்லாத ஒன்றை ஒருவர் புதிதாக உருவாக்கினால், அது நிராகரிக்கப்படும்" என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரீ)
வேண்டுதல், அல்லது பிரார்த்தித்தல் என்பதெல்லாம், ஏக இறையான அல்லாஹ்விடம் மட்டுமே செய்ய வேண்டும். அல்லாஹ் கூறுகின்றான்:
''என்னிடம் பிரார்த்தனை செய்யுங்கள்; நான் உங்களுக்குப் பதிலளிக்கிறேன்.'' (40:60)
நபித்தோழர் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:
நான் ஒருநாள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின்னால் இருந்தேன். அப்போது அவர்கள் கூறினார்கள்:
சிறுவரே! உனக்கு நான் சில விஷயங்களைக் கற்றுத்தருகிறேன்: (நடத்தைகளில்) அல்லாஹ்வைப் பேணிக்கொள்; (இம்மையிலும் மறுமையிலும்) உன்னை அல்லாஹ் பேணிக்காப்பான்; உன் பக்கம் இருப்பான். எதைக் கேட்பதாக இருந்தாலும் அல்லாஹ்விடமே கேள்! உதவி கோருவதானால், அல்லாஹ்விடமே உதவிகோரு!
சமுதாயமே ஒன்றுசேர்ந்து உனக்கு ஒரு நன்மை செய்ய நினைத்தாலும், உனக்கென அல்லாஹ் எழுதிய நன்மையைத் தவிர வேறு எதையும் அவர்களால் உனக்கு அளித்திட முடியாது. அவ்வாறே, சமுதாயமே ஒன்றுசேர்ந்து உனக்கு ஒரு தீங்கு செய்ய நினைத்தாலும், உன்மீது அல்லாஹ் எழுதிய தீங்கைத் தவிர வேறு ஒன்றும் அவர்களால் செய்திட இயலாது. (திர்மிதீ)
அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமும் தேவைகளை முறையிட்டுத் பிரார்த்திக்கவோ பாவமன்னிப்புக் கோரவோ பிள்ளை வரம் கேட்கவோ கூடாது. சோதிடம் பார்ப்பது, சோதிடர்கள் சொல்லும் பரிகாரங்கள் செய்வது, பெரியவர்களிடம் சென்று குறிகேட்டு, அவர்கள் சொல்லும் மந்திர வேலைகளைச் செய்வது போன்ற உபாயங்களால் எந்தத் தீங்கும் அகலப்போவதில்லை. அத்துடன் ஈமானுக்கும் ஆபத்து என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஈமானைத் துறக்கும் இளம் தலைமுறை:
இன்றைக்கு எங்கு பார்த்தாலும், காதல் வலையில் சிக்கி, ஈமானையே இழந்து, ஓடிப்போகும் இளைஞர்கள், இளம்பெண்கள் ஆகியோரின் செய்திகள்தான் தேளாய் கொட்டுகின்றன. காலப்போக்கில், முஸ்லிம் பெற்றோர்களே முன்நின்று இந்தக் கலப்புத் திருமணங்களை நடத்திவைக்கும் கொடுமைகளும் நடக்கின்றன.
பள்ளி, கல்லூரி, விடுதி, அலுவலகம் போன்ற ஆண்-பெண் கலப்புள்ள இடங்களில் நம் பிள்ளைகளும் சுதந்திரமாகப் பழகிவருகின்றனர். இனக் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு காதலின் பெயரால் எல்லாவற்றையும் இழக்கத் துணிந்துவிடுகின்றனர். இது, படுகுழியில் விழுகின்ற முட்டாள்தனம் என்பது, திருமணத்திற்குப் பிறகோ, கற்பை இழந்து நடுத்தெருவில் நிற்கும்போதோதான் இளசுகளுக்கு உறைக்கிறது. அதற்குள் காரியம் கைமீறிப்போய்விடுகிறது.
பெற்ற தாயும் தந்தையும் புத்திர சோகத்தால் அழுதுபுலம்பி, வெளியே தலைகாட்ட முடியாமல், கூனிக்குறுகி, அணுவணுவாகச் செத்துக்கொண்டிருப்பதும், உற்றார் உறவினர் பரிதவிப்பதும், சமுதாயத்திற்கு ஏற்படும் தலைகுனிவும் காதல்போதையில் இருக்கும் அவர்களின் கண்களில் படுவதில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, உயிரிலும் மேலான ஈமானையே இழக்கத் துணிந்துவிட்ட இளவல்களை என்ன செய்வது?
சினிமாவும் சீரியலும் ஈமானுக்கே வேட்டுவைக்கின்றன. உலகமயமாக்கல் கலாசாராத்தால் ஏற்பட்டுள்ள பொருளாதார மோகம் கலாசாரத்தையும் பண்பாடுகளையும் குழிதோண்டி புதைத்துவருகின்றன. நாகரிகம், சுதந்திரம், சமத்துவம் ஆகிய மேற்கத்திய சுலோகங்கள் குடும்பக் கட்டமைப்பு, பாரம்பரிய வாழ்க்கை முறை, சமய நம்பிக்கை ஆகிய எல்லா நல்ல அம்சங்களையும் சீர்குலைத்துவிட்டன.
இந்நிலையில், அகீதாவையும் ஈமானையும் அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்றால், அதற்கு ஒரேவழி, குழந்தைப் பருவத்திலேயே மார்க்கத்தைப் போதிப்பதுதான். பிள்ளைகளுக்குத் தேவையானதைப் பார்த்துப் பார்த்து செய்யும் பெற்றோர்கள், அவர்கள் நல்ல முஸ்லிம்களாக வாழ்வதற்கும் மறுமையில் நரகத்தைவிட்டுப் பாதுகாக்கப்படுவதற்கும் எதையும் செய்யாமல் கோடிகோடியாகப் பணத்தை விட்டுச்செல்வதால் என்ன பயன்?
பெற்றோர்களே! உங்களுக்கு அல்லாஹ் பிறப்பித்துள்ள ஆணையைச் சற்றே சீர்தூக்கிப்பாருங்கள்.
அல்லாஹ் கூறுகின்றான்:
இறைநம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் நரகத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ளுங்கள்! அதன் எரிபொருள், மனிதர்களும் கற்களும்தான். (66:6)
இளைஞர்களே! இளம்பெண்களே! உங்களுக்கு வல்ல இறைவன் பிறப்பிக்கின்ற ஆணையையும் விடுக்கும் கடுமையான எச்சரிக்கையையும் தயைகூர்ந்து சீர்தூக்கிப்பாருங்கள்! திருந்துங்கள்! அல்லாஹ் கூறுகின்றான்:
இணைகற்பிக்கும் பெண்கள் இறைநம்பிக்கை கொள்ளாத வரை, அவர்களை நீங்கள் மணக்காதீர்கள்; இணைவைப்பவர் உங்களை (எவ்வளவுதான்) கவர்ந்தாலும், அவளைவிட இறைநம்பிக்கைகொண்ட ஓர் அடிமைப்பெண்ணே சிறந்தவள்.
இணைகற்பிக்கும் ஆண்கள் இறைநம்பிக்கை கொள்ளாத வரை, அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள். இணைவைப்பவன் உங்களை (எவ்வளவுதான்) கவர்ந்தாலும், அவனைவிட இறைநம்பிக்கை கொண்ட ஓர் அடிமையே சிறந்தவன்.
அவர்கள் உங்களை நரகத்திற்கு அழைக்கிறார்கள். ஆனால், அல்லாஹ்வோ தனது ஆணையின்பேரில் சொர்க்கத்திற்கும் பாவமன்னிப்பிற்கும் அழைக்கிறான். (2:221)
உங்களில் யாரேனும் தமது மார்க்கத்திலிருந்து மாறி இறைமறுப்பாளராக மரணித்தால், அவர்களின் நற்செயல்கள் யாவும் இம்மையிலும் மறுமையிலும் அழிந்துவிடும். அவர்கள் நரகவாசிகள் ஆவர். அதில் அவர்கள் நிரந்தரமாகக் கிடப்பார்கள். (2:217)
(மலேசியாவில் நடைபெற்ற தேசியத் திருக்குர்ஆன் மாநாட்டு ஆய்வு மலரில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை)
நன்றி: அ.முஹம்மது கான் பாகவி
No comments:
Post a Comment