அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)- நீடூர் நெய்வாசல் இணையதளத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

Tuesday, September 13, 2011

ஏமாறாதீர்கள்!!

நீடூர் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா எனும் மதரசா சார்பில் தானமாக வழங்கிய 25 ஏக்கர் இடத்தில் வக்ஃபு வாரியத்தின் சார்பில் மருத்துவக் கல்லூரி ஆரம்பிக்கப் போவதாக கடந்த சில வாரங்களாக பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது. இதற்கான ஆலோசனைக் கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றது.
இது குறித்து தகவல் அறிய மூன்று நபர்களின் தொலைபேசி எண்கள் நீடூர் இணைய தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எஸ்கொயர் சாதிக், இஸ்மாயீல் நாஜீ, ஜர்ஜிஸ் ஆகிய மூவரின் செல்போன்கள் தொடர்பு எண்ணாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்களைத் தொடர்பு கொள்ளும் போது ஒவ்வொருவரும் முரண்பட்ட தகவல்களைக் கூறுகின்றனர்.
இவர்களிடம் விசாரிக்கும்போது மருத்துவக் கல்லூரியை வக்ஃபு வாரியம் நடத்துவதாகக் கூறாமல் மக்களிடம் ஷேர் சேர்த்து தனி டிரஸ்டாக நடத்த இருப்பதாகக் கூறுகின்றனர்.
இந்தக் கல்லூரிக்கு மக்களிடம் ஷேர்  பங்கு சேர்க்கிறோம். ஒரு ஷேர் பத்து லட்சம் ரூபாய். ஐந்து ஆண்டுகள் கழித்து ஆண்டு தோறும் ஒரு மாணவருக்கு ஷேர் வாங்கியவர்களுக்கு மெடிக்கல் சீட் கொடுப்போம். அதை யாருக்கும் அவர்கள் கொடுத்துக் கொள்ளலாம் என்று கூறுகின்றனர்.
இது வக்ஃபு வாரியத்தால் நடத்தப்படுகிறதா என்று கேட்கும் போது இல்லை. நாங்கள் தனியார்தான் நடத்துகிறோம். கவிக்கோ அப்துர் ரஹ்மான் முதல்வரிடம் செல்வாக்குப் பெற்றவராக உள்ளதால் அவர் பெயரைப் பயன்படுத்திக் கொள்கிறோம் என்று இவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் சாதிக் என்பவர் மீது ஏற்கெனவே நீடூர் பள்ளிவாசலுக்காக நிதி திரட்டியது குறித்து புகார் உள்ளதாகவும் இஸ்மாயில் நாஜீ மீது வேறு விதமான புகார்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
  • இந்த நிலையில் இவர்களை நம்பி சமுதாயத்தின் தனவந்தர்கள் கொடுக்கும் பல கோடிகளுக்கு யார் பொறுப்பு?
  • வக்பு வாரியம் இதற்கு பொறுப்பேற்றுக் கொள்ளுமா?
  • பொறுப்பேற்றுக் கொள்ளாது என்றால் வக்ஃபு வாரியத்துக்கும் நடத்த விருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள கல்லூரிக்கும் என்ன தொடர்பு?
  • மக்களிடம் ஷேர் வாங்குவது நீடூரைச் சேர்ந்த சிலரா? அல்லது வக்ஃபு வாரியமா? மக்கள் ஷேர் எவ்வளவு?
  • வக்ஃபு போர்டின் ஷேர் எவ்வளவு?
  • ஆனால் மேற்கூ றிய பிரதிநிதிகள் வக்ஃபு போர்டிற்கும் மருத்துவக் கல்லூரிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அனைத்து ஷேர்களும் தனியாருடையதுதான் என்று கூறுகின்றனர். மயிலாடுதுறைக்கு மிக அருகில் சிதம்பரத்தில் மருத்துவக் கல்லூரி இருக்கும் போது மயிலாடுதுறையில் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி கிடைக்குமா?
  • இதற்கான எல்லா சாத்தியக் கூறுகளும் ஆராயப்பட்டதா?
  • கல்லூரி இப்போது ஆரம்பிக்கப்படாது. இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஆரம்பிக்கப்படும் என்றால் அது வரை அந்த நிதி யார் வசம் இருக்கும்?
  • 25 ஏக்கர் நிலத்தை (ஏக்கர் இரண்டு லட்சம் ரூபாய் பெறுமானமுள்ளது) யாரோ தருவதை மட்டும் அடிப்படையாக வைத்து அவர்கள் வக்ஃபு போர்ட் பெயரைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டதா?
  • இதன் ஆரம்ப முயற்சியில் இருந்து அனைத்து விஷயங்களையும் வக்பு போர்டு சட்டப்படி தன் பொறுப்பில் நடத்துகிறது என்றால் எந்த அடிப்படையில் மூன்று தனி நபர்களின் பெயர்கள் அதுவும் புகார்களுக்கு உள்ளானவர்களின் தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டன?
  • வக்ஃபு போர்டை யாரோ கருவியாகப் பயன்படுத்துகிறார்களா?
  • அல்லது இந்த மூவரும் வக்ஃபு வாரியத்தின் பிரதிநிதி களா?
  • வக்ஃபு வாரியத்தில் இவர்களின் பொறுப்பு என்ன?
  • இவர்களுக்கும் வக்ஃபு வாரியத்துக்கும் சம்மந்தம் இல்லாவிட்டால் இவர்கள் எப்படி பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்?
இதுபோன்ற கேள்விகளுக்கு வக்ஃபு வாரியம் தெளிவாக பதில் தர வேண்டும்.
இது குறித்த அனைத்து பொறுப்பும் அனைத்து நிர்வாகமும் வக்ஃபு போர்டிடம் இல்லாமல் தனி நபர்களிடம் இருந்தால் ஷேர் சேர்வதற்கு முன் நன்கு யோசித்துக் கொள்வது சமுதாயத்தின் கடமையாகும்.
ஏற்கனவே சமுதாயத்துக்கு நாளிதழ் நடத்தப் போகிறேன் என்று மக்களிடம் சிலர் ஷேர் சேர்த்து அதன் கதி என்னவானது என்பதை சமுதாயம் மறந்திருக்காது.
வக்ஃபு வாரியத் தலைவரின் பெயரைப் பயன்படுத்தி யாரோ சிலர் உள்வேலை செய்வதாக எழுந்துள்ள சந்தேகத்தை நீக்கி வக்ஃபு வாரியமே அனைத்துக்கும் பொறுப்பு ஏற்று அனைத்து அறிவிப்பு களும் வக்ஃபு வாரியத்தின் பெயரால் அறிவிக்கப்படாவிட்டால் சில தனியார்கள் சமுதாயத்தை ஏமாற்ற முனைகிறார்கள் என்றுதான் நாம் கருத வேண்டியிருக்கும்.
வக்ஃபு வாரியத்துக்கு இதில் சம்மந்தம் இல்லை என்றால் வக்ஃபு வாரியத்தின் பெயரைப் பயன்படுத்துவதை வக்ஃபு வாரியம் தடை செய்வதுடன் பயன்படுத்தியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். வக்ஃபு வாரியம்தான் இதை நடத்துகிறது என்றால் இதன் அனைத்து அறிவிப்பு களையும் அனைத்து ஒப்பந்தங்களையும் பணம் செலுத்துவோருக்கு அளிக்கும் அனைத்து உத்தரவாதங்களையும் வக்ஃபு வாரியமே கொடுக்க வேண்டும்.
அதன் விதிகள் பொது அறிவிக்கை மூலம் மக்களுக்கு வெளியிடப்பட வேண்டும். வக்ஃபு வாரியம் தாமதமின்றி இதை தெளிவுபடுத்த வேண்டும் என்று சமுதாயத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி: ONLINEPJ.COM

No comments:

Post a Comment